சூட்கேஸ் பெட்டிக்குள் மறைந்து வந்த அகதி: அதிரடியாக கைது செய்த பொலிசார்
சுவிட்சர்லாந்து நாட்டில் நுழைவதற்காக சூட்கேஸ் பெட்டிக்குள் மறைந்து வந்த அகதி ஒருவரை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
எரித்திரியா நாட்டை சேர்ந்த 21 வயதான வாலிபர் ஒருவர் இத்தாலி நாட்டில் நண்பர் ஒருவருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இத்தாலியை விட்டு வெளியேறி சுவிஸில் நுழைய அந்த வாலிபர் திட்டமிட்டுள்ளார். ஆனால், அவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.
எனினும், தனது நண்பரிடம் சரியான ஆவணங்கள் இருந்ததால் அவருடைய உதவியுடன் சுவிஸில் நுழைய தீர்மானித்துள்ளார்.
இதன் அடிப்படையில், நண்பன் கொண்டு சென்ற சூட்கேஸ் பெட்டிக்குள் புகுந்து மறைந்துள்ளார். நண்பர் அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு ரயில் ஒன்றில் பயணம் செய்துள்ளார்.
சுவிஸின் டிசினோ மாகாணத்தில் உள்ள Chiasso என்ற நகருக்கு ரயில் வந்து நின்றவுடன், அதில் பொலிசார் ஏறி வழக்கமான சோதனை செய்துள்ளனர்.
அப்போது, நண்பர் கொண்டு சென்ற சூட்கேஸ் பெட்டி புடைத்துக்கொண்டு இருந்ததால் பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், பெட்டியை தூக்கி பார்த்தபோது அது மிகவும் கனமாக இருந்ததால், அதை வெளியேற்றி தரையில் வைத்துள்ளனர்.
அப்போது, பொலிசார் கண் முன்னால் பெட்டிக்குள் இருந்த வாலிபர் மெதுவாக வெளியேறியதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கையும் களவுமாக பிடிப்பட்ட வாலிபரையும் அவரது நண்பரையும் பொலிசார் உடனடியாக கைது செய்தனர். பின்னர், இருவரிடம் விசாரணை நடத்திய பிறகு எச்சரிக்கை செய்து இத்தாலி நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.