2018ல் வடக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இராணுவமயத்திலிருந்து விடுபடும்! மங்கள
எதிர்வரும் 2018ம் ஆண்டாகும்போது வடக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இராணுவத்தைக் குறைக்கும் செயற்பாடு நிறைவுசெய்யப்படும். அதாவது வடக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் இராணுவமயத்திலிருந்து விடுவிக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ராஜபக்ச அரசாங்கம் வடக்கில் மட்டுமல்ல நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவத்தை பரப்பியுள்ளது. இதில் நாம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
கேள்வி:- இராணுவத்தை அகற்றும் செயற்பாடு தொடர்பில் ஜெனிவாவில் பேசியிருந்தீர்கள்? அது குறித்து சற்று விளக்க முடியுமா?
பதில்:- நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இராணுவத்தைக் குறைக்கும் செயற்பாட்டை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. வடக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இராணுவ மயத்திலிருந்து விடுவிக்கப்படும்.
தற்போதே வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் செயற்பாட்டை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.குறிப்பாக அங்கு சிவில் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
அதுவே இராணுவ மயத்திலிருந்து வடக்கு கிழக்கை விடுவிக்கும் ஒரு படிமுறைதான்.2018ம் ஆண்டுக்குள் வடக்கு உட்பட முழுநாட்டிலிருந்தும் இராணுவ ஈடுபாடு குறைக்கப்படும்.
ராஜபக்ச அரசாங்கம் வடக்கில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவத்தை பரப்பியுள்ளது. இதில் நாம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். அந்த வகையில் 2018 ஆகும் போது இராணு வம் முழுமையாக குறைக்கப்படும்.
மேலும் தற்போதே பொது மக்களின் செயற்பாடுகளிலிருந்தும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்தும் விலகுமாறு இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதாவது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என இராணுவத்தினருக்கு கூறியுள்ளோம்.
இராணுவத்தினரும் அவ்வாறான செயற்பாடுகளிலிருந்து விலகிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர் .
எனவே 2018 ஆம் ஆண்டில் இந்த மாற்றத்தை மக்கள் காணலாம் என்றார்.