சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை, ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் விசேட விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தனியான அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி மூன்று அமைச்சுக்களை மாத்திரமே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும். பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளே ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும்.
சட்டத்திற்கு முரணாக இந்த அமைச்சு பொறுப்பை வைத்திருக்கும் ஜனாதிபதி, நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய முதலாவது நபராக மாறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் துக்கத்தினத்தை அனுஷ்டிக்குமாறே நான் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவிடம் கூறினேன்.
அவர் அதனை திரிபுப்படுத்தி, கடைகளை மூடி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.