135 கிலோ எடையுள்ள கரடியுடன் சண்டையிட்ட நபர் – வனத்தில் நிகழ்ந்த பகீர் சம்பவம்
கனடா நாட்டில் 135 கிலோ எடையுள்ள கருப்பு கரடியுடன் நேருக்கு நேர் நின்று சண்டையிட்டு உயிர் தப்பியுள்ள நபரின் துணிச்சல் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Sudbury பகுதி வனத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே பகுதியில் வசித்து வரும் ரிக் நெல்சன் என்ற 61 வயதான நபர் ஒருவர் தனது நாயை அழைத்துக்கொண்டு கடந்த ஞாயிறு அன்று நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார்.
காட்டு வழியாக அவர் சென்றபோது ஓரிடத்தில் சிறிய குகை போன்ற ஒரு இடம் இருந்ததை கண்டு அதனை ஆராய்ந்துள்ளார்.
அப்போது, சிறிய குகையில் இருந்து கரடி குட்டி ஒன்று திடீரென தனது தலையை வெளியே நீட்டியுள்ளது. குட்டியை பார்த்த ரிக் நெல்சன் அதன் தலையை பிடித்து அன்பாக தடவி கொடுத்துள்ளார்.
ஆனால், அதிர்ச்சி அடைந்த குட்டி கரடி தனது தாய் கரடியை அழைக்கும் விதத்தில் ஒலி எழுப்பியது. தன்னை நோக்கி ஆபத்து வருவதை உணர்ந்த ரிக் நெல்சன் எழுந்து நின்று தப்ப முயன்றுள்ளார்.
ஆனால், சில அடிகள் தூரத்தில் செடிகள் வேகமாக அசைய, அங்கிருந்து இராட்சத கரடி ஒன்று வெளியே வந்து ரிக் நெல்சன் முன்னால் நின்றுள்ளது.
முன்னாள் கரடி வேட்டைக்காரர் என்பதால், தாய் கரடியின் தாக்குதலை எதிர்க்க ரிக் நெல்சன் தயாராக நின்றுள்ளார்.
கரடி அருகே நெருங்கியதும் அதன் முகத்தை நோக்கி குத்து விட முயன்றுள்ளார். ஆனால், கரடி விலகியதால் அதற்கு அடிப்படவில்லை.
ரிக் நெல்சனிடமிருந்து விலகிய அந்த கரடி அவரை திருப்பி தாக்கியது. இதில், அவருக்கு மார்பிலும் முகத்திலும் நகக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
முயற்சியை கைவிடாத ரிக், இரண்டாவது முறையாக கரடியை தாக்க முயன்றுள்ளார். இந்த முறை கரடியின் முகத்தில் பலமாக தாக்கியுள்ளார்.
இந்நிலையில், அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த குட்டி கரடி திடீரென அங்கிருந்து விலகி ஓடியுள்ளது. குட்டி கரடி ஓடியதை கண்ட தாய் கரடியும் ரிக் நெல்சனை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடி மறைந்துள்ளது.
சிறு காயங்களுடன் கரடியிடம் இருந்து உயிர் தப்பிய ரிக் நெல்சனின் துணிச்சலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.