ஐ.நா தீர்மானம் சர்வதேச விசாரணையாக மட்டுமே இருக்க வேண்டும்! சிறிதரன் எம்.பி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தமிழ் மக்கள் மத்தியில் சிறிய நம்பிக்கையினை ஏற்படுத்தியிருந்தாலும், அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2009ஆம் ஆண்டுக்கு பின்னரே தமிழ் மக்களின் வாழ்வியல் மற்றும் வரலாறு போன்றன அழிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐ.நா கூட்டத் தொடர் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் அசமந்த போக்குடன் செயற்படுகின்றது.
குறிப்பாக மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்த கதியிலேயே உள்ளது.
இந்நிலையில், இன அழிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் தமக்கான நியாயம் பெறும் ஒரு வழியாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையினை தெரிவு செய்துள்ளனர்.
எனவே, ஐ.நா. தீர்மானம் என்பது சர்வதேச விசாரணையாக மட்டுமே அமைய வேண்டுமே தவிர இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணையாக அமைந்து விடக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.