சர்வம் தாள மையம் படத்திற்கு பிறகு, ஜிவி பிரகாஷ் நடிப்பில் வாட்ச்மேன், குப்பத்து ராஜா, ஜெயில், 100 சதவீதம் காதல் உள்ளிட்ட அரை டஜன் படங்களுக்கு மேல் வரிசைக்கட்டி நிற்கின்றன. இவற்றில் வாட்ச்மேன் படத்தை விஜய் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் நாய் ஒன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. வருகிற ஏப்., 12ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் ஒன்று சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த போஸ்டரில் நாயின் வாயில் ஒரு பலகை தொங்கவிடப்பட்டுள்ளது. அதில், “iam a chowkidar too”, நானும் பாதுகாவலன் தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி, நான் பாதுகாவலன் என்ற பெயரில் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு, பிரசாரத்தை துவங்கி உள்ளார். தொடர்ந்து டுவிட்டரில் தனது பெயரையும் “சவ்கிதார் (பாதுகாவலர்) மோடி” என மாற்றி உள்ளார். பல அமைச்சர்களும், பா.ஜ.வினரும் இதை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், வாட்ச்மேன் படத்தின் போஸ்டரில், நாயை வைத்து இந்த வாசகம் பயன்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.