ஆந்திர மாநில அரசியலில் ஒரு புதிய சர்ச்சை ‘லட்சுமியின் என்டிஆர்’ படத்திற்குப் பிறகு நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அந்தப் படத்தின் இரண்டாவது டிரைலர் அமைந்துள்ளது. ராம்கோபால் வர்மா, அகஸ்திய மஞ்சு இணைந்து இயக்கியுள்ள இந்தப் படம் என்டிஆர் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்ட லட்சுமி பார்வதி பார்வையில் என்டிஆர் எப்படி இருந்தார் என்பதைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கி குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்தவர் என்டிஆர். அதன்பின் அவருடைய சொந்த மருமகனான சந்திரபாபு நாயுடு, அவருக்கு எதிராக கலகம் செய்து ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றினார். அந்த விஷயங்கள் படத்தில் நேரடியாகவே காட்டப்பட்டுள்ளது என்பதை இரண்டாவது டிரைலர் காட்சிகள் மூலம் புரியும்.
படத்தில் என்டிஆர் மகள்களும், மகன்களும் லட்சுமி பார்வதியை நேரடியாகத் தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளது. என்டிஆர் மகன் பாலகிருஷ்ணா நடித்து வெளியிட்ட என்டிஆர் வாழ்க்கை வரலாறு இரண்டு பாகப் படங்களும் படுதோல்வி அடைந்த நிலையில் இந்த ‘லட்சுமியின் என்டிஆர்’ படம் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.