சென்னையின் விருகம்பாக்கத்தில் பிரதான பகுதியில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தின் வாசலில் ஏராளமான பெண்கள் குவிந்துள்ளனர். சுமார் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் அங்கு காத்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் இழப்பை சந்தித்தவர்கள் என்பதை அவர்களின் பார்வையில் நம்மால் உணர முடிந்தது.
கணவனால் கைவிடப்பட்டவர்கள் முதல், பிள்ளைகளால் சொத்துக்களை ஏமாந்தவர்கள் என பல தரப்பட்ட பெண்கள் அங்கு இருந்தனர். இவர்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் கிடைக்க வேண்டும் என்று ஓயாமல் வேலைப் பார்த்து வருகிறார் எலிசபெத். யுனிவர்சல் எம்பிளாய்மென்ட் நிறுவனத்தின் நிர்வாகியான இவர் ஒவ்வொருவரின் தேவைகளை புன்சிரிப்போடு பூர்த்தி செய்து வருகிறார்.
நம்மில் பலருக்கு பல விதமான தேவைகள் உள்ளது. வீட்டு வேலை செய்ய, வீட்டில் உள்ள பெரியவர்களை பராமரிக்க, சமைக்க, கார் ஓட்ட, தோட்டத்தை பராமரிக்க, குழந்தைகளை பார்த்துக் கொள்ள… இப்படி நம்முடைய தேவைகளை நாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இந்த அனைத்து தேவைகளையும் மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றி வருகிறார்.
எலிசபெத்.நெல்லையை பூர்வீகமாக கொண்ட எலிசபெத்துக்கு வீட்டு வேலைக்கு ஆட்களை ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை துவங்குவதற்கு முன் ஒரு சின்ன பிளாஷ்பேக். எலிசபெத் பட்டப்படிப்பை முடித்தவர். சுருக்கெழுத்தும் பயின்றுள்ளார். எல்லா பெண்களைப் போல படிப்பு முடிந்து திருமணம். சென்னைக்கு குடும்பத்துடன் செட்டிலானார். படிப்பு முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை.
அதனால் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்ய சென்றுள்ளார். அங்கு இவரைப் போல் பலர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்ய வந்திருந்தனர். அதை பார்த்து மலைத்து போன எலிசபெத், நாம் வேலைத் தேடி அலைவதை விட நாம் ஏன் மற்றவருக்கு வேலை அமைத்து தரக் கூடாதுன்னு யோசித்துள்ளார்.
இங்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்கணும். ஆனால் படிப்பறிவில்லாத பல பெண்கள் வேலை இல்லாமல் இன்றும் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் யாராக இருந்தாலும் அவர்களுக்கான வேலை வாய்ப்பை அமைத்து தர திட்டமிட்டார். அதன்படி கடந்த 2002ல் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
சமையலுக்கு பெண்கள் தேவையா? வீட்டோடு தங்கி வீட்டு வேலை செய்ய வேண்டுமா? முதியோரை பராமரிக்க நர்ஸ் வேண்டுமா எதற்கும் தன்னிடம் ஆட்கள் உள்ளது என்கிறார் எலிசபெத். சென்னை மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்களை தானே நேரில் சென்று தேர்வு செய்கிறார். இதன் மூலம் கல்வியறிவு அற்றவர்கள் முதல் பட்டம் பெற்ற பெண்கள் வரை பலரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
இதுவரை இந்த நிறுவனம் மூலம் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலை பெற்றுள்ளனர். இவர்களுக்கு 3 மணி நேர வீட்டு வேலைக்கு மாத சம்பளம் 6 ஆயிரமும், 8மணி நேர வேலைக்கு ரூ.15 ஆயிரம் வரை பெற்றுத் தருகிறார்.
சென்னை மட்டுமின்றி தில்லி, மதுரை, ஐதராபாத் போன்ற வெளியூர்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் வீட்டு வேலை உள்ளிட்ட பணிகள் செய்வதற்கான பெண்களை அனுப்புகிறார். அவ்வாறு செல்லும் பெண்களுக்கு இவர் சில நிபந்தனைகளை முதலாளியிடம் விதிக்கிறார்.
அதை அவர்கள் ஒப்புக் கொண்ட பிறகு தான் ஆட்களை அங்கு வேலைக்கே நியமிக்கிறார். காரணம் பெண்கள் தங்களின் குடும்பத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பு அவசியம் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். இவர் சட்டம் படித்துள்ளதால் அந்த சட்ட அறிவு இவருக்கு பலமாக கைகொடுக்கிறது.வேலை கேட்டு வரும் பெண்களை உடனே பணிக்கு இவர்கள் அனுப்புவ தில்லை.
அவர்களுக்கு வீட்டு வேலை தெரியுமா? சமையல் தெரியுமா? மருத்துவம் தொடர்பான அனுபவம் உள்ளதா என முதலில் அவர்களின் திறமையை ஆய்வு செய்கிறார்கள். நர்ஸ் பணிக்கு வருபவர்களின் அனுபவ சான்றிதழ் உட்பட ஆய்வு செய்யப்படுகிறது. சமையல் செய்ய தெரியாத நபர்களுக்கு சமையல் கற்றுக்கொடுத்தும், வீட்டு வேலை செய்ய பயிற்சி அளித்த பிறகு தான் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அவர்களை அனுப்பி வைக்கிறார்கள்.
அதே சமயம் இவர்களுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டாலும் அவர்களுக்காக சட்ட ரீதியாகவும் குரல் கொடுக்கிறார்கள். மேலும் இவர்களிடம் பணியாற்றும் சொந்த பந்தம் இல்லாத முதியவர்களை கடைசி காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்தும் பராமரித்து வருகிறார்.