இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதை நேரில் கண்ட இருவர் இன்று சாட்சியம்!
திருகோணமலை, கிளிவெட்டி – குமாரபுரம் பகுதியில் 1996ம் ஆண்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், மேலும் இருவர் இன்று சாட்சியமளித்துள்ளனர்.
ஜூரிகள் முன்னிலையில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இந்த படுகொலை வழக்கு விசாரணைகள் ஐந்தாவது நாளாகவும் இன்று நடைபெற்றது.
ஜூரிகள் முன்னிலையில் இன்று ஆஜரான இருவரி்ல் ஒருவர் தனது மகன் மற்றும் மகளின் கொலையை நேரடியாகப் பார்வையுற்ற சாட்சியாளராகவும், மற்றையவர் தனது குடும்பத்தினர் ஏழு பேரை இரத்த வௌ்ளத்தில் பார்த்த சாட்சியாகவும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.
இதன்போது இன்றைய முதலாவது சாட்சியாக சாட்சியமளித்துக் கொண்டிருந்த பெண் தன் பிள்ளைகளின் படுகொலைகள் தொடர்பில் விபரிக்கும் போது நீதிமன்றத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து மீண்டும் அரை மணித்தியாலத்தின் பின்னர் அவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
தமது ஊர்ப்பக்கம் பலமாக வெடிச்சத்தம் கேட்ட போது வீட்டுக்கு விரைந்ததாகவும் அங்கு தனது நிறை மாத கரிப்பிணியான மனைவி உட்பட 7 பேரை உயிரிழந்த நிலையில் கண்டதாகவும் 50 வயதான சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இராணுவத்தினரே அவர்களை சுட்டுக்கொன்றதாக சம்பவத்தைக் கண்டவர்கள் கூறியதாக அவருடைய சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள ஆறு படை வீரர்களில் மூவர் சாட்சியாளர்களால் தனித்தனியே இதுவரை அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை வரை சாட்சி விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.