கனடா வரும் மெக்சிகோ நாட்டவருக்கு இனி விசா தேவையில்லை
அமெரிக்கா கனடா மற்றும் மெக்சிகோ நாட்டுத்தலைவர்கள் Ottawaவில் விரைவில் சந்திக்கவிருக்கிறார்கள். வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இவர்கள் சந்திக்கவிருக்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளராக நிற்கக்கூடியவராக பார்க்கப்படும் டொனால்ட் ட்ரம்ப் தான் ஆட்சிக்கு வந்தால் இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.
ஆனால் உலக அளவில் நிலவும் ஸ்திரமற்ற சூழலில் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது மிகவும் அவசியம் என்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. தமது இந்த நிலைப்பாட்டை செயற்படுத்தும்விதமாக கனடா வரும் மெக்சிகோ நாட்டவருக்கு விசா ரத்துசெய்வதாக அவர் அறிவித்திருக்கிறார்.
நாற்பதாண்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த பிரிட்டன் அதிலிருந்து விலகவேண்டும் என்று பிரிட்டன் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தெரிவித்திருக்கும் பின்னணியில் கனடா பிரதமரின் இந்த அறிவிப்பு சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.