சித்திரவதை தொடர்பான முறைபாடுகள் அதிகரிப்பு! மனித உரிமைகள் ஆணைக்குழு
அதிகாரங்கள், பலங்களை உபயோகித்து செய்யப்படும் சித்தரவதைகள் தொடர்பாக கிடைக்கும் முறைபாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இது தொடர்பாக 413 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், இந்த வருடத்தின் ஆரம்ப பகுதியில் 43 முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நாளைய தினம் இடம்பெறவுள்ள நடைபவனி தொடர்பாக ஊடகங்களை தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
நபரகள் காணாமல் போனமை தொடர்பாக அண்மையில் முறைபாடுகள் கிடைக்கவில்லை. சித்திரவதை தொடர்பான முறைபாடுகளும், பொலிஸாரின் பராமரிப்பில் உள்ள போது செய்யப்படுகின்ற சித்திரவதை தொடர்பிலான முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், அரசியரமைப்புக்கு அமைய சித்திரவதைகளை தடுக்கும் உரிமை மக்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எந்தவொரு சித்திரவதையையும் யாராலும்
நியாயப்படுத்த முடியாது. பிரச்சினையான சந்தர்ப்பங்களில் கூட சித்திரவதைகளை நியாயப்படுத்த முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சபையின் தலைவர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை நாளைய தினம் காலை 8.30க்கு இந்த நடைபவனி பிரதான அலுவலகத்திற்கு முன்னாள் ஆரம்பமாகவுள்ளதுடன் இதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிரதேச காரியாலயங்கள் ஊடாக குறித்த சித்திரவதை தொடர்பில் தெளிவுபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஊடக சந்திப்பானது மும்மொழிகளிலும் இடம்பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.
பொலிஸ் தடுப்புக் காவலில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகின்றன! மனித உரிமை ஆணைக்குழு
கடந்த ஆண்டில் 413 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி திபீகா உடகம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தங்களை பிரயோகித்தல் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபடுதல் ஆகிய 413 சம்பவங்கள் கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 43 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்ட எண்ணிக்கை அவை என்றாலும் அதனை விடவும் அதிகளவான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம்.
நபர்களை காணாமல் போகச் செய்யும் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் இடம்பெறவில்லை. சித்திரவதைச் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
குறிப்பாக பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்திருக்கும் போது சித்திரவதைகள் இடம்பெறும் சம்பவங்கள் பதிவாகின்றன.
சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். சித்திரவதைகளிலிருந்து விடுபடுவதற்கு அரசியல் சாசனத்தில் சட்டங்கள் காணப்படுகின்றன.
சித்திரவதைகளை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. 1994ஆம் ஆண்டு 22ஆம் இலக்க சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சித்திரவதைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.
அதிகாரத்தை பயன்படுத்தி உடல் அல்லது உள ரீதியாக சித்திரவதைகளை மேற்கொள்ள முடியாது.தகவல்களை பெற்றுக் கொள்ளவும் தண்டனை விதிக்கவும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சித்திரவதை மேற்காள்ளப்படுகின்றது.
இது சட்டத்தின் பிரகாரம் குற்றச் செயலாகும். இதற்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டியது அவசியமாகின்றது.
சித்திரவதைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் மந்த கதியொன்று காணப்படுகின்றது.
சந்தேக நபர்களிடம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள சித்திரவதை செய்யக்கூடாது. உளவியல் ரீதியான பல்வேறு அணுகுமுறைகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.
அவ்வாறான முறைமைகளே பயன்படுத்த வேண்டும். பொலிஸாரின் தொழில்சார் திறமைகளை விருத்தி செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.