அமெரிக்காவில் இருமொழிக் கொள்கையில் தமிழுக்கு அங்கீகாரம்
அமெரிக்காவில் முதல்முறையாக ‘இருமொழி முத்திரை’ தமிழ் மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை யுனெஸ்கோ பரப்புரை செய்து வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்காவில் ஆங்கிலம் தவிர வேறோருமொழியை முறையாக முழுமையாகக் கற்பதற்கான சட்டத் திட்டங்களை வகுக்கப்பட்டுள்ளது. அதனை ஊக்குவிக்கும் விதமாகப் பல சலுகைகளையும் 20 மாகாணங்களில் நடைமுறை படுத்தியுள்ளனர். இதில் மிகமுக்கியமானது இருமொழி முத்திரை வழங்கும் திட்டம். ஒரு மொழியைக் கசடறக் கற்கும் மாணவர்களை இந்நாட்டின் மொழித்திறன் கோட்பாடுகளை வகுக்கும் வெளிநாட்டு மொழி கற்பித்தலுக்கான அமெரிக்க கவுன்சில் நிறுவனத்தின் மதிப்பீட்டு முறைகளை ஒட்டி, அங்கீகரிக்ககப்பட்ட தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களின் மொழியறிவினைச் சோதித்துத் தேர்ச்சிப் பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் தான் ‘இருமொழி முத்திரை’ வழங்கும் திட்டம்.
இதுவரை தமிழிற்காக யாரும் இம்முத்திரைப் பெற்றதில்லை என்ற குறையை மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளி மாணவிகள் இருவர் பெற்றுள்ளனர். வைசாட்டாப் பள்ளியில் 11 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி ஜானிஸ் பெஞ்சமின் பள்ளியில் பிரெஞ்சு மொழியையும் தமிழ்ப்பள்ளியில் 8 ஆண்டுகளாகத் தமிழும் கற்று வருகிறார் . ஈடன் ப்ரைரி மாவட்டப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவி லக்ச்கன்யா பள்ளியில் பிரெஞ்சு மொழியையும் தமிழ்ப்பள்ளியில் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தமிழும் படித்துவருகிறார் . இருவரும் பென்சில்வேனியாப் பல்கலைகழகப் பேராசிரியர் வாசு ரெங்கநாதனால் மதிப்பீடு செய்யப்பட்டுத் தேர்ச்சியடைந்து இம்முத்திரையைப் பெற்றுள்ளனர்.
பென்சில்வேனியா, பெர்க்கிலி, ஹார்வர்டு போன்ற பல்கலைக் கழகத் தமிழ்த் துறைகளில் மாணவர்களின் தமிழறிவைச் சோதிக்க அமெரிக்க நாட்டின் மொழித்திறன் கோட்பாடுகளை வகுக்கும் நிறுவனத்தின் மதிப்பீட்டு முறைகளை ஒட்டி முறைப்படுத்தப் பட்ட இலக்களவுகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இவ்விரு மாணவர்கள் பெற்ற தமிழறிவைத் தனியாகப் பரிசோதித்து இவர்களுக்கு இருமொழி முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
மினசோட்டா தமிழ்சங்க தமிழ்ப்பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் மினசோட்டா கல்வித் துறையின் உலக மொழிக் கல்விக்கான சிறப்பு அதிகாரி உருசுலா லென்ட்ஸ், இவ்விரு மாணவர்க்கான இருமொழி முத்திரை பற்றிய அறிவிப்பு விடுத்ததோடு, மினசோட்டா மாநிலக் கல்வித்துறையின் சிறப்புச் சான்றிதழும் முத்திரையும் இவர்களுக்கு வழங்கிக் கவுரவித்தார். இதன்மூலம் அம்மாநிலப் பல்கலைகழகக் கல்லூரிகளில் சேர்வதற்குக் கூடுதல் தகுதியாகவும் உலக மொழிக்கான மதிப்பீடுப் புள்ளிகளை மூன்று முதல் நான்கு பருவங்களுக்குப் பெறமுடிவதால் இவர்கள் கல்லூரிக் கட்டணத்தில் கணிசமான பணத்தைச் சேமிக்கவும் முடியும். இந்தக் கல்வியினால் இருமொழி முத்திரையும் அதன் அடிப்படையில் அதிகபட்ச மொழி மதிப்பீட்டு புள்ளிகளை மேல் நிலைப் பள்ளியிலேயே ஈட்டுவதும் கூடுதல் பலன்களாகும். இதன் மூலம் அதிகபட்ச மொழிமதிப்பீட்டு புள்ளிகளை மேல் நிலைப் பள்ளியிலேயே மாணாக்கர் ஈட்ட முடிவதோடு, இந்த முத்திரை கல்லூரி சேர்க்கையில் கூடுதல் தகுதியாக அமைகிறது. மேலும் கல்லூரிகளில் உலக மொழிக்கான மதிப்பீட்டு புள்ளிகளை 4 பருவங்களுக்கு இணையாகப் பெற முடிகிறது.
மினசோட்டா மாநிலத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு 11 மாணவர்களோடு தொடங்கப்பட்ட ‘மினசோட்டாத் தமிழ்சங்கப் பள்ளி’ தமிழ்க் கல்வியை அறிவுப்பூர்வமாக ஆய்வு செய்து பாடத்திட்டங்களைக் கட்டமைத்ததோடு இங்குத் தமிழ்மொழிப் படிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்களையும் அறிவுறுத்தியதின் பயனாக இன்று 250 க்கும் மேற்பட்ட மாணவர்களோடு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருகிறது . மினசோட்டா தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பள்ளி தமிழ் மொழிக் கல்விக்கான தரத்தினைத் தொடர்ந்து கூட்டி வருவதோடு, தமிழ்க் கல்விக்காக 2014ல் தரச்சான்றிதழும்பெற்றுள்ளது.