ஒரு நிமிடம் தாமதமானதால் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்த தமிழக வீரர்கள்
தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஓட்டப்பந்தய வீரர்கள், ஒரு நிமிட தாமதத்தினால் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ள சம்பவம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
56-வது தேசிய தடகள போட்டிகள் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நாளில் நடைபெற்ற போட்டிகளில் தமிழக அணி மூன்று தங்கப்பதக்கங்களை வென்றது.
பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் தமிழக வீராங்கனை சூர்யா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 33 நிமிடம் 27.01 விநாடிகளில் கடந்தார்.
ஆனால், ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிக்கு தகுதி பெற,போட்டி தூரத்தை 32 நிமிடம் 15 விநாடியில் கடந்திருக்க வேண்டும். ஒரு நிமிடம் தாமதமானதால் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்துள்ளார் சூர்யா.
அதே போல 5,000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் தமிழக வீரரான லெட்சுமணன் பந்தய தூரத்தை 14 நிமிடம் 6 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
ஆனால், ரியோ ஒலிம்பிக் தகுதி நேரமான 13 நிமிடம் 25 நொடிகளில் போட்டி தூரத்தை கடக்காததால் அவரும் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்துள்ளார்.