“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்”
என்ற பாடல் வரிகளை ஷேர் செய்து கவியரசர் கண்ணதாசனுக்கு நன்றி கூறியது ஃபேஸ்புக். அதற்கு லைக் போட்டுவிட்டு என்னவென்று கேட்ட வாட்ஸ் அப்புக்குத் தனது பதிலை டைப் செய்யத் தொடங்கியது. “இளையராஜா 75 நிகழ்ச்சிதான் தமிழ்நாட்டின் தற்போதைய ஹாட் டாபிக். நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் இன்னிக்கு நடக்கப் போறதால, அதுல இளையராஜாவின் இசைக் கச்சேரியும் இருக்குறதால ஒரு பக்கம் ரசிகர்கள் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. பல தடைகளைத் தாண்டியும் நிகழ்ச்சியை நடத்திட்டதால தயாரிப்பாளர்கள் சங்கமும் ஹேப்பி. ஆனால், இதுல மூன்றாவதா சந்தோஷப்படும் ஒரு டீமும் உண்டு. அது, தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்கத்தை எதிர்க்கும் டீம்தான்” என்ற ஃபேஸ்புக் போஸ்டுக்கு லைக் போட்டு, மேல சொல்லச் சொல்லி வாட்ஸ் அப் கமெண்ட் செய்ய, ஃபேஸ்புக் ரிப்ளை செய்தது.
“தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து பார்த்திபன் விலகல் இளையராஜா நிகழ்ச்சியின் இத்தனை நெருக்கத்துல ஏன் நடந்ததுன்னு மிகப்பெரிய குழப்பத்துல இருந்த எதிர் டீமுக்கு, இளையராஜா 75 நிகழ்ச்சியின் முதல் நாள் நல்ல பதிலைக் கொடுத்திருக்கு. விழா ஏற்பாட்டுல நடந்த குளறுபடிகளை வைத்தே இன்னும் வலிமையா சங்க நிர்வாகத்தை எதிர்க்கலாம்னு தயாராகிட்டாங்க. முதல் நாள் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை நெருக்கமா கவனித்துவந்த பார்த்திபனுக்கு விஷயம் புரிஞ்சதும் உஷாரா எஸ்கேப் ஆகிட்டாரு. இளையராஜாவுக்கு நடக்கும் பல விதமான பாராட்டு விழாவுல, இது எவ்வளவு சிறந்ததா இருக்கும்னுதான் போட்டி இருந்திருக்கணும். ஆனால், எவ்வளவு மோசமான விழா அப்படிங்குறதுதான் இந்த விழாவின் நோக்கமா போயிடுச்சு” என்ற ஃபேஸ்புக் கமெண்டுக்கு வாட்ஸ் அப் லைக் போட்டுவிட்டு, ‘அப்படி என்ன தான் முதல் நாள் விழாவில் நடந்தது?’ என்று கமெண்டில் கேட்டது.
“மொத்த இந்தியாவுக்குமான தேசிய கீதம் போல, தமிழகத்துக்கும், தமிழுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இன்றியமையாதது. ஆனால், அந்த வாழ்த்துப் பாட்டை, ரீமேக் செய்து நிகழ்ச்சியோட ஆரம்பத்துல ஒலிக்கவிட்டிருக்காங்க. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமே இப்படி செய்யலாமான்னு நிகழ்ச்சியிலேயே சலசலப்பு ஏற்பட்டது” என்று ரிப்ளை செய்தது ஃபேஸ்புக். வாட்ஸ் அப் லைக் போட்டு முடிப்பதற்குள் அடுத்த கமெண்டை டைப் செய்யத் தொடங்கியது ஃபேஸ்புக்.
தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளா இருக்கவங்க பல பேர் இயக்குநர்களும்கூட. விஷால், துரைராஜ் உட்பட்ட சிலர் மட்டுமே இயக்குநர் லேபிளுக்குக் கீழ வர மாட்டாங்க. ஆனால், அப்படிப்பட்ட சங்கம் ஏற்பாடு செய்த விழாவில் இயக்குநர்களுக்குக் கிடைத்த மரியாதையை சொல்றேன் கேளுங்க. ஷங்கர், சுந்தர்.சி உள்ளிட்ட சில இயக்குநர்கள் இளையராஜா கிட்ட பாட்டு கேட்டு வர்ற மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தது. பெரும்பாலும் இளையராஜா இசையில் படம் எடுக்காத இயக்குநர்கள் அந்த லிஸ்ட்ல இருந்ததால, ரொம்ப சுவாரசியமா இருக்கும்னு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்க நடந்ததோ ‘இளையராஜா இசைல படம் எடுக்காத நீங்க எல்லாரும் ஒரு இயக்குநரா?’ அப்படின்னு கேட்பது போல இருந்தது. உதாரணத்துக்கு, ஷங்கர் ஒரு ஒப்பாரி பாட்டுக்கு இளையராஜா கிட்ட பாட்டு கேட்பது போலவும், அதற்கு ஐந்தாயிரம் பேர் ஒரே நேரத்துல ஒப்பாரி பாட வைக்குற மாதிரி ஷங்கர் கேட்பாராம். அதற்கு அண்டார்டிகாவில் ரூம் போட்டு மியூசிக் பண்ணிடலாம்னு சொல்லுவதாகவும் அந்த விவரிப்பு இருந்தது. சுந்தர்.சி பற்றி கவலைபடவே தேவையில்லையாம். ஏன்னா, ஒரே கதையை வைத்து நடிகர்களை மட்டும் மாத்தி அவர் படம் எடுக்குறதால, ஒரே பாட்டு அவர் படத்துக்கு போதும்னு சொல்லிடுற மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதாவது இளையராஜாவைப் பெருமைப்படுத்துவதற்குப் பதிலாக, மற்றவர்களை மட்டம் தட்டுவதையே விழா முழுக்க பார்க்க முடிந்தது” என்ற ஃபேஸ்புக் கமெண்ட் விழுந்த அடுத்த நொடி “இதையெல்லாம் நிகழ்ச்சிக்கு வந்த யாரும் கேள்வி கேட்கவில்லையா?” என்று கேட்டது வாட்ஸ் அப். சொல்றேன் என ரிப்ளை செய்துவிட்டு, டைப் செய்யத் தொடங்கியது ஃபேஸ்புக்.
“அரசியல் கட்சிக் கூட்டத்தில் எல்லாம், தலைவர் வர்றதுக்கு முன்னால சிலரைப் பேச வைப்பாங்க. எதிர்க்கட்சியை வகை தொகை இல்லாம விமர்சனம் செய்றது அவங்களோட முக்கிய நோக்கம். சமயத்துல சில கெட்ட வார்த்தைகளும் வரும். அப்படித்தான் முதல் நாள் நிகழ்ச்சியும் நடந்திருக்கு. ஏன்னா, இரண்டாம் நாள்தான் தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஜாம்பவான்கள் வர்றாங்க. சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற நடிகர்கள்கூட இரண்டாம் நாள்தான் வர்றாங்க. இதையெல்லாம் ஓரமா தள்ளிவிட்டாலும் பாரதிராஜா, வைரமுத்து இல்லாத பாராட்டு விழாவை இளையராஜாவே எப்படி ஏத்துக்குவார் என்பதுதான் பலரின் கேள்வி. இதுவரைக்கும் சொன்ன மூன்று விஷயங்கள்தான் தயாரிப்பாளர்கள் சங்கத்துல பெரிய புயலைக் கிளப்பியிருக்கு. ‘இளையராஜா நிகழ்ச்சி நடத்தி வர்ற பணத்துல எல்லாத்தையும் சரி பண்ணலாம்னு சொல்லிட்டு, இப்ப இவ்வளவு மொக்கையா ஒரு நிகழ்ச்சிக்குத் திட்டம் போட்டிருக்கீங்களே’ அப்படின்னு கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் சங்கத்துல பதில் இல்லை. அதனால்தான், எதிர்காலத்துல தனக்கு இந்தப் பிரச்சினையில் எந்த பங்கும் வந்துவிடக் கூடாது என்று சொல்லி பார்த்திபன் விலகிவிட்டார். நிகழ்ச்சி முடியட்டும்னு காத்திருந்த பல தயாரிப்பாளர்களுக்கும் பார்த்திபனின் விலகல் பெரிய அதிர்ச்சி. ஆமாம், அவங்களை முந்திட்டாருல்ல… அதிர்ச்சி ஆகாமல் இருக்குமா?” என்ற ஃபேஸ்புக்கின் ரிப்ளையில் டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். “எல்லாம் சரி, ஆரம்பத்துல மென்ஷன் பண்ண பாட்டை எழுதியது கண்ணதாசன் இல்லை; அதை எழுதியவர் வாலி” என்ற தகவலை, தனது முதல் போஸ்டில் அப்டேட் செய்துவிட்டு லாக் அவுட் ஆனது ஃபேஸ்புக்.