வலைதளங்களில் இன்று முன்வைக்கப்படும் விமர்சனங்கள் நேர்மையானதா? திரையுலகில் நிழல் உலக தாதாக்களாக வலைதள விமர்சகர்கள் மாறி வருகிற அபாயம் நிகழ்ந்து வருவது உண்மையா?
தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய விஷயங்கள் வருகிறபோதெல்லாம் அவை தங்களுக்கு எந்த வகையில் பலனளிக்கும், உதவிகரமாகயிருக்கும் என்பதைத் தீர்க்கமாக ஆய்வு செய்து ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் சமமாகவே இருந்து வருகின்றனர். எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் கண்மூடித்தனமாக ஆதரித்து, ஊக்குவித்து சூடுபட்டுக்கொண்ட தயாரிப்பாளர்களும் இங்கு உண்டு.
தமிழ் சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முதல் நபராக இருக்கும் நடிகர் கமல்ஹாசன், “அறிவியல் வளர்ச்சியில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு மிரளக் கூடாது அதை நமது தொழில் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று முயற்சி செய்ய வேண்டும்” என்பார்.
இணையதளங்கள் ஊடகங்களாகத் தமிழ் சினிமா செய்திகளை வெளியிடத் தொடங்கியபோது அதை அங்கீகரிக்க தயாரிப்பாளர்களும், சினிமா பத்திரிகை தொடர்பாளர்களும் தயங்கினர். அன்றைக்கு இணையதளங்களை கமல்ஹாசன் இருகரம் கூப்பி ஆதரித்தார்.
அன்று அதை எதிர்த்த பெரும்பான்மையினர் இன்று தங்கள் படத்தின் புரமோஷனுக்கும், சர்வதேச அளவில் செய்திகள் சென்றடையவும் இணையதளங்களையே நம்பியுள்ளனர். தங்கள் படங்களை பற்றி நல்லவிதமான செய்திகள் வெளியிடுகிறபோது அதைத் தயாரிப்பாளர்கள் வாழ்த்துவதோ, நன்றி சொல்வதோ மிக மிக அரிதாகவே நிகழ்ந்து வருகிறது. அதேநேரம் எதிர்மறையான செய்திகள் வந்துவிட்டால் தொலைப்பேசி அழைப்புகள் சம்பந்தப்பட்ட செய்தியாளருக்கு அல்லது நிறுவனத்துக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். செய்தியை எடுக்கச் சொல்லி புலம்புவதும், கெஞ்சுவதும் நடக்கும்.
முடியாதபட்சத்தில் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து பேரம் பேச தொடங்குவார்கள். இந்தச் செய்தியை இணையதளத்தில் இருந்து எடுத்துவிட்டாலும் அப்லோடு செய்த மறுநொடியே உலகம் முழுவதும் இந்தச் செய்தி சென்று விடும் என்கிற அடிப்படை உண்மை தெரிந்தவர்கள் செய்தியை எடுக்க சொல்வது இல்லை.
தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்களிடம் ஏற்பட்ட இந்த பயத்தை தங்களுக்குச் சாதகமாக இணையதளம் நடத்துபவர்களில் சிலர் பயன்படுத்தி வருவதும் இங்கு நடந்து வருகிறது.
ஒரு படம் ஓடினால் அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் கொண்டாடுவதும், ஓடவில்லை என்றால் அந்தப் பட நாயகனுக்கு எதிர்த் தரப்பினர் பார்ட்டி வைத்துக் கொண்டாடுவதும், ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் கோடம்பாக்கத்தில் நடந்து வருகிறது
தனக்கு வேண்டப்படாத நாயகன் நடிக்கும் படங்கள் பற்றிய தவறான அல்லது சரியான செய்திகளைக் கூறும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இங்கு உள்ளனர்.
சில நேரங்களில் தான் முயற்சி செய்து கிடைக்காத வாய்ப்பு தனது போட்டியாளருக்குக் கிடைத்துவிட்டால் அந்தப் படம் சம்பந்தமான தேவையற்ற செய்திகளை மறைமுகமாகக் கசிய விடுகிற வேலையைப் பத்திரிகைத் தொடர்பாளர்கள் செய்த கொடுமையும் இங்கு அரங்கேறியிருக்கிறது.
இந்த பய உணர்வைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் போக்கு இங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காலையில் செய்தியைப் பிரசுரித்துவிட்டு பேரம் முடிந்தவுடன் இணையத்திலிருந்து செய்தியை நீக்கியவர்களும் இங்கு உண்டு.
என்ன நடந்தாலும் நேர்மைக்குப் புறம்பாகச் செய்திகளை வெளியிடுவதில்லை என்பதை அடிப்படையாகக் கொண்ட இணையதளங்களும் இங்கு உண்டு. இவற்றை இனம் பிரித்துப் பார்ப்பதில் தயாரிப்பாளர்களிடமும் நடிகர்களிடமும் தடுமாற்றமும், பயமும் தொடர்ந்து வந்த நிலையில் வலைதளத்தில் விமர்சனமும், ட்விட்டர் கலாச்சாரமும் திரையுலகில் பிரவேசம் செய்தன.
செய்திகளைப் பார்த்து மிரண்டவர்கள் காட்சியாகப் பார்வையாளனை சென்றடையத் தொடங்கியபோது மேலும் பயப்படத் தொடங்கினர்