இந்தியாவில் அரசு கட்டடங்கள், வனப்பகுதி மற்றும் பொது இடங்களில் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு இனி ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த வெளிநாட்டின் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வருவது உண்டு. இவர்கள் படப்பிடிப்பு நடத்தும் இடத்தைப் பொறுத்து, மத்திய – மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், காவல் துறை, தீயணைப்புத் துறை, வனத் துறை, இந்திய தொல்லியல் ஆய்வகம் எனப் பலரிடம் தனித்தனியாக அனுமதி பெற வேண்டியிருந்தது. இதை மாற்றியமைக்கும் வகையில், அனைத்துவிதமான அனுமதியையும் ஒற்றைச் சாளர முறையில் ஒரே அலுவலகத்திலிருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மத்திய செய்தி தொடர்புத் துறையின் கீழ் ‘Film facilitation Office’ எனும் பெயரில் ஓர் அலுவலகத்தை மத்திய அரசு புதிதாகத் தொடங்கியிருந்தது.
இதனால் வெளிநாட்டுத் தயாரிப்பாளர்களே பயனடைந்தனர். இதன் பலனை இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களால் பெற முடியாமல் இருந்தது. இந்த நிலையில், இதை மாற்றி, அனைவருக்கும் ஒற்றை சாளர முறையில் அனுமதி அளிக்கும் வசதி நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கால விரயம், பண விரயம் ஆகியவை தவிர்க்கப்படும் என்பதால் இந்த அறிவிப்புக்கு திரைத் துறையினர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.