2019-20ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான நிதி ஒதுக்கீடு 35.6 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நிதி ஒதுக்கீடு அரசியல் ரீதியாகக் கவனம் பெற்றுள்ளது. பட்டியல் சாதிகளின் நலனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.76,801 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.56,619 கோடியாக மட்டுமே இருந்தது. அதேபோல பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு ரூ.50,086 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.39,135 கோடியாக மட்டுமே இருந்தது.
பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீட்டின் உயர்வு விகிதம் 28 விழுக்காடாக உள்ளது. ஒட்டுமொத்தமாக 2019-20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு 35.6 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. பெரும் வாக்கு வங்கியைக் கொண்டுள்ள பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகளைக் கருத்தில்கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
ஆனால், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியே முழுமையாகச் செலவிடப்படவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.56,501.25 கோடியில் ஜனவரி 31 வரை ரூ.29,911.72 கோடிக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது பட்ஜெட் அறிவிப்பில் வெறும் 52 விழுக்காடு மட்டுமே. இன்னும் 57 நாட்களில் நடப்பு நிதியாண்டு முடிவடையவுள்ள நிலையில் எஞ்சிய 43 விழுக்காடு நிதி ஒதுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே. அதேபோல பழங்குடியினர் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.37,802.94 கோடியில் ஜனவரி 31 வரை ரூ.27,273.67 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது பட்ஜெட் ஒதுக்கீட்டில் 72 விழுக்காடாகும்.