தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “எனினும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பிற்கான யோசனையில் இணங்கக்கூடிய விடயங்கள் எதுவும் இல்லை.
இந்த யோசனையை எப்படியாவது தோல்வியடைய செய்ய வேண்டும். இதனை தோல்வியடைய செய்யவில்லை என்றால் அது நாட்டிற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கருத்திலேயே நானும் உள்ளேன். தமிழ் மக்களை ஈடு வைத்துவிட்டு நாட்டை நடத்திச் செல்வதற்கு இடமளிக்க கூடாது“ என தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.