கிழக்கு மாகாணத்திற்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் ஹிஸ்புல்லா தொடர்பில் கடந்த காலத்தில் பல கசப்புணர்வுகள் இருந்திருக்கின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அவற்றினை வெல்லக்கூடிய வகையில் எதிர்கால செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திசவீரசிங்கம் நான்காம் குறுக்கு வீதியை புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு அங்கு ஜனநாயக அரசியலுக்கு அப்பால் கேலிக்கூத்தான விடயங்கள் நடந்தேறியுள்ளன. 55 நாட்கள் நடைபெற்ற செயற்பாடுகள் அரசியல் யாப்பிற்கு அப்பால்பட்ட செயற்பாடுகளாகவே இருந்தன.
சட்ட ஆட்சியை பாதுகாக்க வேண்டும், அரசியல்யாப்பினை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் நியாயமாக, நீதியாக சிந்தித்தன் அடிப்படையில் சட்டவிரோதமான, அடாவடித்தனமான சூழ்நிலையினை தவிர்த்திருந்தோம்.
இதன்போது எமது சட்டத்தரணிகளான சுமந்திரன், கனகேஸ்வரன் ஆகியோர் உயர்நீதிமன்றில் தமது வலுவான வாதங்களை முன்வைத்து நாட்டின் ஜனநாயகத்தினை பாதுகாத்தனர்.
குறிப்பாக தமிழ் சட்டத்தரணியான கனகேஸ்வரன் வெளியில் வருகின்றபோது இரண்டு சிங்கள சட்டத்தரணிகள் அவரின் காலில் விழுந்து நாட்டின் ஜனநாயகத்தினையும், மக்களையும் பாதுகாத்து தந்த உத்தமர் என்ற வகையில் மரியாதை செய்தார்கள் என்றால் தமிழர்களின், மரியாதை, மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
சின்னத்தனமாக சில விமர்சனங்கள் இருந்தாலும் கூட தூய்மையான அரசிலை, ஜனநாயக அரசியலை முன் கொண்டு செல்கின்றோம்.
தற்போது ஆட்சியமைத்துள்ள பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினையும் பொருளாதார ரீதியான அபிவிருத்தி திட்டங்களையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளது.
இருக்கின்ற இரண்டு வருட காலப்பகுதியில் பலவிதமான அபிவிருத்திகளை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தினை நாங்கள் கட்சியுடன் இணைந்து உறுதியாக பின்பற்றுவோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த இடத்திலும் விலைபோகாத கட்சி. பணத்திற்கோ, பதவிக்கோ பலியாகாத கட்சி என்ற உண்மையினையும் நாங்கள் நிலைநாட்டியுள்ளோம். விதிவிலக்குகள் இருந்தால் அதனை பொதுவிதியாக நாங்கள் மாற்றிக்கொள்ளக்கூடாது.
ஒருவர் விதிவிலக்காக சென்றாலும் ஏனைய அனைவரும் பொதுவிதியாக ஒரு கொள்கையின் கீழ் இருந்துள்ளோம்.
நாட்டில் உள்ள ஜனநாயகத்தினை மதிப்பவர்கள், நேர்மையாக சிந்திப்பவர்கள் மத்தியில் நாங்கள் சரியாக செயற்படுகின்றோம் என்பதை கடந்த காலத்தில் பதிவு செய்துள்ளோம். இருக்கின்ற காலத்தினை மிகவும் அவதானமாக கொண்டு செல்லும் நிலையுள்ளது.
ஆளுநராக நியமிக்கப்படுபவர் பல்லின சமூகத்தின் எண்ணங்களையும், அபிலாசைகளையும் பிரதிபலிக்ககூடிய வகையில் செயற்படும்போது தான் அவரை முழுமையான ஆளுமையுள்ளவராக கருத முடியும்.
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா பல்லின சமூகத்திற்குரிய தலைமைத்துவத்தினையும், ஆளுமையினையும் கொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு செயற்பாடுகளிலும் பங்குதாரியாக இருக்க வேண்டும்.
கடந்த காலத்தில் பல கசப்புணர்வுகள் இருந்திருக்கின்றன. அவற்றினை வெல்லக்கூடிய வகையில் எதிர்கால செயற்பாடுகள் அமைய வேண்டும். எந்தவொரு சமூகத்தினரும் குறைகூறாத வகையில் அவரது ஆளுமை செயற்படுத்தப்பட வேண்டும்.
தனிப்பட்ட வகையில் இனமத ரீதியாக குரோதங்கள் இல்லாமல் எல்லோரும் ஒரே நாட்டவர்கள் என்று சிந்தித்தாலும் அதற்குரிய செயற்பாடுகள் வார்த்தைகளில் இல்லாமல் செயலில் அமைய வேண்டும். அதனை ஆளுநர் நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.