சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களை படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, நாமல் குமார, சிறிலங்கா இராணுவ காவல்துறையினால் கைது செய்யப்படவுள்ளார்.
நாமல் குமார 2009ஆம் ஆண்டு சிறிலங்கா விமானப்படையில் இணைந்து கொண்டு பயிற்சியின் போது தப்பிச் சென்றவர் என்றும், பின்னர் 2011ஆம் ஆண்டில், சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போது, தப்பிச் சென்றார் என்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
அத்துடன், சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்டபோது அவர் சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ் போலியானது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் மீது எடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கை நாமல் குமாரவுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவருக்கு எதிராக நடத்தி வரும் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், இராணுவ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.