ராயல்டி விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர்கள் இடையே பிரச்னை உருவாக தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக சிறு பட தயாரிப்பாளர்களான பிடி செல்வகுமார் தலைமையிலான 6 பேர், இளையராஜா மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : இளையராஜா இசையில் 5000 பாடல்களுக்கு மேல் வெளியாகி உள்ளன. பாடல்கள் உரிமையும், அதன்மூலம் வரும் அனைத்து வருவாய்களும் தனக்கே வர வேண்டும் என்று உரிமை கொண்டாடி வருகிறார். இளையராஜாவை வைத்து ஆரம்பகாலங்களில் பஞ்சு அருணாச்சலம், கேஆர்ஜி, பாலசந்தர், ஆனந்தி பிலிம்ஸ் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படமெடுத்துள்ளனர்.
பாடல்கள் வெற்றி பெற்ற போதிலும், அந்த வருவாய் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்காமல் ஏமாற்றப்பட்டு வந்துள்ளது. இளையராஜாவின் இசைக்கு முதலீடு செய்த பல தயாரிப்பாளர்கள் பல கஷ்டமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இளையராஜாவின் பரிந்துரையின்படி பல தயாரிப்பாளர்கள் தங்களது ஆடியோ உரிமையை எகோ கம்பெனிக்கு வழங்கி உள்ளனர். அதில் வரும் ராயல்டி 50 சதவீதம் பங்கு, இதுவரை எந்த தயாரிப்பாளர்களுக்கும் முறையாக வந்ததில்லை. இனி வரும் காலத்திலாவது இந்த படங்களின் மீது ராயல்டி ரூ.25 லட்சம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருமானம் படமெடுத்த தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களை சாருமே தவிர சம்பளம் வாங்கி இசையமைத்த இளையராஜாவுக்கு எக்காரணத்தை கொண்டும் சாராது என்று தயாரிப்பாளர்கள் கேட்டு வருகிறார்கள். இதுவரை 200 கோடிக்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டிய பங்கு பணம் ஏமாற்றப்பட்டிருக்கிறது.
படங்களின் பாடல்களின் மூலம் வரும் ராயல்டி தொகையை மீட்டெடுக்க தயாரிப்பாளர்கள் பிடி செல்வகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இளையராஜா மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கச்சேரி, காலர் டியூன், பாடல் ஒலிபரப்புகள் மூலம் வரும் வருவாயில் தங்களுக்கு உரிய பங்கு வர வேண்டும் என்று அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த குழுவில் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.