புதிய அரசாங்கத்தினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கு அறிக்கைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி வாக்களித்தமைக்கான காரணத்தை அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
எதிர்வரும் 4 மாதங்களுக்கான நிதித் தேவைக்காக நிறைவேற்றப்பட்ட கணக்கு அறிக்கையில் தேவையற்ற அரசியல் நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காகவே நாம் எதிராக எமது வாக்கைப் பிரயோகித்தோம் என பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றைய இடைக்கால கணக்கு அறிக்கைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே வாக்களித்திருந்தது.
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க, ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அல்லது சமுர்த்தி வழங்க என அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் இந்த கணக்கு அறிக்கை ஒதுக்கப்பட்டிருந்தால் அதற்கு ஆதரவு வழங்கியிருப்போம்.
ஆனால், இதில் அரசாங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கான பாரிய நிதித் தொகையொன்று உள்வாங்கப்பட்டிருந்தது. அரச தேவையைக் காட்டி அரசாங்கத்தின் அரசியல் தேவைக்கு நிதி ஒதுக்கீடு செய்து கொள்ளும் ஒரு முயற்சியாகவே இடைக்கால கணக்கு அறிக்கை காணப்பட்டது.
1800 பில்லியன் ரூபா நிதியை அடுத்த நான்கு மாதத்துக்கு செலவாகஇந்த அறிக்கையில் கோரியுள்ளது. இந்த அரசாங்கத்தினால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் ஆறு மாத காலத்துக்குரிய செலவாகவாவது இவ்வளவு தொகை நிதியை திரைசேறியிலிருந்து கோரியிருக்க வில்லை.
இந்த அரசாங்கம் எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைக்கு பொது மக்களின் வரிப்பணத்தை செலவு செய்யவே எதிர்பார்த்துள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.