இந்தியாவின் ரூ.2000, ரூ. 500 மற்றும் ரூ. 200 நோட்டுக்களை செல்லாது என நேபாள நாடு அறிவித்து தடை செய்துள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுக்கள் வெகுநாட்களாக நேபாளத்தில் புழக்கத்தில் உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது நேபாள வங்கிகள் அந்நாட்டில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விட்டது. அதற்குப் பிறகு இந்திய அரசு புதிய ரூ.2000, ரூ.500 மற்றும் ரூ.200 மதிப்பிலான புதிய நோட்டுக்களை வெளியிட்டது.
இந்த நோட்டுக்களை குறித்து கடந்த 2 ஆண்டுகளாக நேபாளம் எந்த ஒரு முடிவையும் சொல்லாமல் இருந்தது. ஆகவே மக்கள் இந்த புதிய நோட்டுக்களை நேபாளத்தில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது நேபாளம் இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளது. அத்துடன் அந்த நோட்டுக்களை உபயோகிக்க தடை விதித்துள்ளது.
இந்த அறிவிப்பினால் இந்தியாவில் இருந்து செல்லும் குறைந்த வருமானம் உள்ள பயணிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அது மட்டுமின்றி இந்தியாவுக்குள் வந்து பணி புரியும் நேபாள பணியாளர்களும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேபாள நாடு வரும் 2020 ஆம் ஆண்டை நேபாள சுற்றுலா வருடமாக கொண்டாட உள்ளது. ஆகவே இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.