பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சகோதரி அலீமா கானுக்கு, வெளிநாட்டில் பினாமி பெயரில் சொத்துகள் வாங்கி குவித்த வழக்கில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரூ.2,940 கோடி வரி மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வரி மற்றும் அபராதத் தொகையை ஒருவாரத்திற்குள் செலுத்தும்படி அலீமா கானுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்தவர்கள் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுகுறித்து அந்நாட்டு மத்திய வருவாய் ஆணையம் (FBR) விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தங்கை அலீமா கான் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் ஐக்கிய அரபு நாட்டில் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக வருவாய் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு தனது வழக்கறிஞருடன் ஆஜரான அலீமா, கடந்த 2008-ம் ஆண்டு அந்த சொத்துக்களை 3,70,000 அமெரிக்க டாலருக்கு வாங்கியதாகவும் பின்னர் 2017-ம் ஆண்டு அந்த சொத்துகளை விற்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சொத்துகளை விற்பதற்கு முன்னரே, மத்திய வருவாய் ஆணையத்துக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெளிநாட்டில் சொத்துகள் வாங்குவதற்கான பணம் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டு, இங்கிருந்து சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது நாட்டை கொள்ளை அடிப்பது போன்றது என்று கூறினர்.
இதையடுத்து, அலீமா கான் ரூ.2,940 கோடி அபராதம் செலுத்த உத்தரவிடுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவர் தவிர பாகிஸ்தானை சேர்ந்த மேலும் 44 அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் ஐக்கிய அரபு நாடுகளில் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேலும் 96 பேருக்கு வெளிநாட்டில் சொத்துகள் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர்களையும் சேர்த்து 2,154 பேருக்கு வெளிநாட்டில் சொத்துகள் உள்ளது. அவர்களில் 1,208 பேர் ஐக்கிய அரபு நாடுகளில் சொத்துகள் வைத்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.