பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரின் கொலை சொல்லும் செய்தி என்ன?
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவின் எதிர்காலம் குறித்த குடியொப்ப வாக்கெடுப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ள நிலையில் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கொக்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்படுகொலையானது வேறு சில கோணங்களிலும் பல அதிர்வுகளைக் கிளப்பியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடரவேண்டுமென்ற தரப்பின் முக்கிய ஆதரவாளராக பதிவுபெற்றிருப்பவர் ஜோ கொக்ஸ் என்பது முதலில் கவனிக்கப்படத்தக்கது.
பிரித்தானிய அரசியலைப் பொறுத்தவரை பதவி வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் படுகொலையான இறுதிச் சம்பவம் 1990 இல் இடம்பெற்றிருந்தது.
அப்போது ஐ.ஆர்.ஏ எனப்படும் அயர்லாந்து குடியரசு ராணுவம் மேற்கு சஸெக்ஸ் பகுதியில் நடத்திய வாகனக் குண்டுத்தாக்குலில் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் கோவ் கொல்லப்பட்டிருந்தார்.
இதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அவ்வப்போது கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டிருந்தாலும் 1990 இல் இயன் கோவ் கொல்லப்பட்ட பின்னர், படுகொலையான நாடாளுமன்ற உறுப்பினர் என்ற துன்பியல்பதிவை ஜோ கொக்ஸ் பெற்றிருக்கின்றார்
படுகொலையான ஜோ கொக்சுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டுதரப்புகளுமே, தத்தமது பரப்புரைகளை நாளை சனிக்கிழமை வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன
இதற்கிடையே ஜோ கொக்ஸை படுகொலைசெய்த சந்தேக நபரான ரொமி மேர் மனநலங் குன்றியவராக இருந்தாலும், அவர் ஒரு வலதுசாரிஅரசியல் அனுதாபியாக இருப்பது கவனிக்கத் தக்கது. ஜோ கொக்ஸை படுகொலை செய்தபோது சந்தேக நபர் எழுப்பிய “முதலில் பிரித்தானியா” என்ற கொட்டொலியும், ஐரோப்பிய ஒன்றியம் குறித்த வாக்களிப்பில் சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, அடுத்தவாரம் இடம்பெறவுள்ள குடியொப்ப வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமென்ற தரப்புக்கு வாக்களிக்க முடிவெடுத்த தொழிற்கட்சி வாக்காளர்கள் தமது முடிவை மாற்றக்கூடும்.
இது போலவே, தொழிற்கட்சியிலுள்ள இதுவரை “முடிவெடுக்கமுடியாத” தொங்கு நிலையில் இருக்கும் வாக்காளர்களின் வாக்குகளும் ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டுமென்ற தரப்புக்குச் செல்லக்கூடும் என அனுமானிக்கப் படுகிறது.
இதற்கிடையே கொலைச் சந்தேகநபரான ரொமிமேர் “முதலில் பிரித்தானியா” என்ற கொட்டொலியை எழுப்பினாலும் அவருக்கும் தமது அமைப்புக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லையென, தீவிர வலதுசாரி அமைப்பான “முதலில்பிரித்தானியா”அறிவித்துள்ளது
எனினும் ஜோகோக்ஸின் வாழ்க்கைத் துணைவரான பிரன்டன் இந்தப்படுகொலை குறித்து வெளியிட்ட அறிக்கையில் ஒரு அழைப்பைச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
அதாவது, தனது துணைவியார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் வெறுப்புணர்வுக்கு எதிராக மக்கள் ஒன்றினைய வேண்டும் என்பதே அவரது முக்கிய அழைப்பாகும்.
ஆகையால் ஐரோப்பியஒன்றியம் குறித்த குடியொப்ப வாக்கெடுப்பின் பின்னணியுடன் பிரித்தானியாவில் தீவிர வலதுசாரி அமைப்புக்கள் தலையெடுத்துவிடும் என்ற எச்சரிக்கை முன்வைக்கபட்டுள்ளது
இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட ஜோகொக்ஸ் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாமல் ஒரு மனிதாபிமானச் செயற்பாட்டாளராகவும் அறியப்பட்டவர்.
ஓக்ஸ்பாம் அமைப்பின் கொள்கைத் தலைவராக அவர் பணிபுரிந்தபோது கடுமையாக போர் இடம்பெற்ற நாடுகளின் போர் வலயங்களுக்கு சென்று மனிதாபிமானப் பணிகளிலும் ஈடுபட்டவர்.
இதனைவிட குடிமக்களுக்கு எதிராகப் போரை நடாத்தும் சிரியத் தலைவர் அல் அசாத் போன்றவர்களையும் அவர் கடுமையாக விமர்சித்தவரென்பதால் வேறுகோணத்திலும் இந்த படுகொலை குறித்த புலனாய்வு நகர்த்தப்படக்கூடும்.
எது எப்படியோ, ஜோகொக்ஸ் தனது சொந்தத்தொகுதி மக்களை சந்தித்துக்கொண்டிருந்த படுகொலைசெய்யப்பட்ட இந்தச் சம்பவம் பிரித்தானியா முழுவதும் கடும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு யோர்க்ஷயரில் இந்த துன்பியல் சம்வம் இடம்பெற்றிருந்தாலும், லண்டன் அரசியலரங்கிலும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற அரங்கான வெஸ்ற்மினிஸ்டரில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே பூக்களை குவித்தும் மெழுவர்த்திகளை ஏற்றியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் டௌனிங்வீதியில் உள்ள தலைமையமைச்சர் டேவிட்கமரனின் பணியகத்திலும் தேசியக்கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
ஆக மொத்தம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கொலையை மையப்படுத்திய ஒரு அதிர்வு என்பதற்கு அப்பால், ஐரோப்பிய ரீதியில் தற்போதுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தல் மற்றும் அதிதீவிர வலதுசாரிகளின்தாக்கம் ஆகியவை உள்ள ஒரு காலகட்டத்தில் இந்தக்கொலை இடம்பெற்றிருப்பதால் அது அசாதராண அதிர்வுகளை ஏற்படுத்தவே செய்யும்.
– See more at: http://www.canadamirror.com/canada/64477.html#sthash.sSO8aD9O.dpuf