கிணற்றில் தவறி வீழ்ந்து 7 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மறவன்புலவு மத்தியில் நேற்று நடந்துள்ளது. கணேசபிள்ளை பிரசாத் (வயது-–7) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் தந்தை 6 மாதங்களுக்கு முன்னர் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். தாயும், 15 வயதுச் சகோதரனும் வேலைக்குச் சென்றுள்ளனர். சிறு வனும், 5 வயதுச் சகோதரியும் வீட்டில் இருந்துள்ளனர்.
சிறுவன் வீட்டில் இருந்த கிணற்றில் குடி தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளான். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். சகோதரி அதைக் கண்டு சத்தமிட்டுள்ளார். உடனே அயலவர்கள் கூடி, சிறுவனைக் கிணற்றில் இருந்து மீட்டனர். நோயாளர் காவு வண்டி மூலம் சாவகச்சேரி மருத்துமனைக்குக் கொண்டு சென்றனர்.
சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று உறுதிப்படுத்தினர். சிறுவனின் உயிரிழப்புத் தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் பெய்த மழை காரணமாக கிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தமது பிள்ளைகள் தொடர்பாகப் பெற்றோர் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.