இலங்கை அரசியலில் உலகப் பிரசித்தி பெற்ற இராஜதந்திரியாக உருவெடுத்தவர் ஜே.ஆர் ஜெயவர்த்தன. இவர் ஒரு முழுநேர அரசியல்வாதி. தனது மூளைப்பலத்தால், உள்நாட்டு அரசியல், பிராந்திய அரசியல், பன்னாட்டு அரசியல் என எல்லா மட்டங்களிலும் தனது ஆளுமையைச் செலுத்தியவர்.
உயர் கல்வி, உயர் சாதி மதிப்பு, பண பலம் என எல்லாம் கிடைக்கப் பெற்ற நபர்.
அவரிடமுள்ள மிக முக்கியமான விடயம் அல்லது மற்றவர்கள் விரல் சுட்டிக் குற்றம் சுமத்த முடியாத விடயம் அவரிடம் நூறு ரூபா கூட ஊழல் இல்லாததே. இந்த நபருடன் ஒப்பிடக்கூடிய ஒரு தமிழரோ, முஸ்லிமோ இல்லை. இந்த ஊழல் விடயத்தில் மிகவும் கண்ணியமான ஒருவராக இன்றுவரை அரசியலில் நிற்பவர் அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்க என்றால் நம்புவது கடினமானதாக இருக்கலாம்.
ரணில் விக்கிரமசிங்க தனக்காக நூறு ரூபாவைக்கூட எடுப்பதில்லை. இந்த அடிப்படையில் கூறக்கூடிய இன்னோர் நபர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சந்திரிகா. அவ்வறெனில் ரணிலை ‘ஹோறா’ (கள்ளன்) என்று எதிர்க் கட்சிகள் கத்துவதன் அர்த்தம் என்ன?
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிதி வழங்கு கின்ற முக்கிய நபராக இருந்தவர் தயாகமகே. அவருக்குச் சொந்தமான எல்வத்த சீனித் தொழிற்சாலை மற்றும் சாராய உற்பத்தி நிலையங்கள் மகிந்த தரப்பினரால் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் முடக்கப்பட்டன. கட்சிக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்காகவே அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டு (ஜனநாயக விரோதச் செயல்) பிணை முறி மோசடியில் அவரது மருமகனான அர்ஜூன் அலோசியஸ் முன்னிறுத்தப் பட்டது, கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்யப்பட்ட வடிசாலை என்பன எல்லாமே ரணிலுக்கு உதவியாகத் தமிழரே செயற்படுகின்றனர் என்ற மறைமுகமான பரப்புரையை மகிந்த தரப்பு முன்வைப்பதற்குக் காரணமாக அமைந்தன.
இதில் 10ரூபா கூட ரணில் தனக்காக எடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், மற்றவர்களுக்கு இலஞ்சம் வழங்கவும் ஏனையவர்கள் தன்னில் தங்கி நிற்கவும் இந்தப் பணத்தை ரணில் கையாண்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், பல அரசியல் வாதிகள் விரும்பியோ, விரும்பா மலோ ரணிலை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின்
தமிழர் மீதான அராஜகங்கள்
1993ஆம் ஆண்டில் ரணசிங்க பிரேமதாசவின் சாவின் பின்னர் ஏறத்தாழ கால் நூற்றாண்டு அரசியலை ஐக்கிய தேசியக் கட்சி இழந்திருந்தது. அதற்கு முதன்மைக் காரணம் காமினி திசாநாயக்க, லலில் அத்துலத் முதலி, ஜி.எம்.பிரேமச்சந்திர போன்ற இரண்டாம் நிலைத் தலைவர்கள் கொல்லப்பட்டமைதான். ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே 1977ஆம் ஆண்டு இனக்கலவரம், 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலக எரிப்பு, 1983ஆம் ஆண்டு இனக்கலவரம், 1987ஆம் ஆண்டு இந்திய – –இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு வெலிஓயா என்ற நிலப்பரப்பை வடமத்திய மாகாணத்துடன் இணைத்தமை எனத் தமிழருக்கு எதிரான பல திட்டமிட்ட பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டது.
மிக இறுக்கமான கட்டுப்பாட்டுடன் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை 2002 ஆம் ஆண்டில் பேச்சு என்ற பெயரில் தலைமறைவு வாழ்வில் இருந்த வெளியில் கொண்டு வந்து, பன்னாட்டு அரங்கில் பேச்சு நடத்தி 2004ஆம் ஆண்டில் கருணாவை அந்த அமைப்பிலிருந்து பிரித்த பெருமையும் அந்தக் கட்சிக்கே உண்டு.
கண்டுகொள்ளப்படாத
ஜனநாயக மீறல்கள்
அதன் தலைவர் ரணில் 2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் மைத்திரிபாலவை அதுவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலரையே பிரித்தெடுத்து வெற்றி பெறச் செய்தவர். இது ஓர் அடிப்படை ஜனநாயக மீறல். ரணில், மைத்திரி ஆகிய இருவருக்கும் இதில் பங்குண்டு. இந்தச் சூழலில் வெறும் 42ஆசனங்களை வைத்துக் கொண்டு ரணில் தன்னைத் தலைமை அமைச்சராக அறிவிக்கக் கேட்டதும் ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கை. நாடாளுமன்ற விதி முறைகளையும் சட்ட திட்டங்களையும், நன்கு அறிந்த ரணில் அதை மீறியதை மூத்த சட்டத்தரணியான சம்பந்தர்கூட அப்போது எதிர்க்கவில்லை. மாறாக எதிர்க்க வேண்டியவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வழங்கித் தன்னை எதிர்க்காமல் இருக்கச் செய்தவர் ரணில்.
கூட்டமைப்பின் ரணில்
மீதான நம்பிக்கை எப்படிச் சாத்தியம்?
2015ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழருக்குச் சார்பாகப் பல விடயங்களை நிறைவேற்றுவார்கள் என நம்பினர். இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளின் மூலம் பெற்ற 16 பிரதிநிதிகள் என எல்லாவற்றையும் ரணில் என்கிற தனி மனிதரிடம் எதை நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அடகு வைத்தார்கள்?
இதுவே மக்களின் கேள்வியாக இருக்கிறது. நல்லாட்சி என்ற பெயரில் பல விடயங்களையும் செய்து தருவார்கள் என நம்பி, மூன்றரை வருட காலங்கள் கடந்துள்ள நிலையில், கூட்டமைப்பின் செயற்பாடு காரணமாக 2018ஆம் ஆண்டில் நடந்த உள்ளூரட்சித் தேர்தலில் வடக்கில் பூநகரிப் பிரதேச சபையையும் கிழக்கில் வெருகல் பிரதேச சபையையும் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தச் சரிவு நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ரணிலுக்கும் இடையிலான இரகசிய உறவுகளே காரணமாக அமைந்தன.
கூடி முடிவெடுப்பதில்
கூட்டமைப்பினர் தயக்கம்
சம்பந்தர், சுமந்திரன், மாவை ஆகிய மூவரும் இணைந்தே பல தீர்மனங்களையும் எடுக்கின்ற கூட்டங்களில் கலந்துகொண்டு வருவதால், ஏனைய 13 உறுப்பினர்களுக்கும் என்ன நடக்கின்றன என்பதை விளங்கிக் கொள்ள முடியாதிருந்தது. ரணில் – மைத்திரி முரண்பாட்டின்போது ரணிலைக் காப்பாற்றுவதில் இந்த மூவரும் எடுத்த முயற்சிக்கு ஏனையவர்கள் ஒத்துழைப்பதில் சிரமங்கள் இருந்ததாகவே தெரிகிறது. இந்த முரண்பாட்டின் ஒரு வடிவமாகக்கூட வியாழேந்திரன் கிழக்கு மாகாண மக்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக அரசுடன் இணைந்ததாககக் கூறிவருவதும் பார்க்கப்படுகின்றது. வடமாகாண முன்னாள் முதல்வர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து பிரித்து தமிழ் மக்கள் கூட்டணி என்றொரு புதிய கட்சியைத் தொடங்குவதற்கும் இது வித்திட்டது என்ற வாதப்பிரதிவாதங்களும் இல்லாமல் இல்லை. இவை ஆரோக்கியமான அரசியல் கட்சி ஒன்றுக்குரிய அடிப்படைப் பண்புகளாகத் தெரியவில்லை.
தற்போதைய நெருக்கடியில்
கூட்டமைப்பின் நிலைப்பாடு
எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை களை எந்தச் சிங்களத் தலைவரும் தீர்த்து வைக்காத நிலையில், இந்த நெருக்கடிச் சூழலில் நாம் எந்தவொரு கட்சிக்கும் சார்பாகவும் வாக்களிப்பில் ஈடுபட்டால் எம்மைத் தெரிவுசெய்த மக்கள் எம்மீது அதிருப்தியும் ஆத்திரமும் அடைவர் எனவே நாம் நடு நிலை வகிக்கிறோம் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்ததன் பின்னர் எமது மக்களின் விடயத்தில் தீர்வு காண்பதற்கு உதவுங்கள் என்று கூட்டமைப்பினர் கூறியிருக்க முடியும். தமிழ்த் தலைவர்கள் தாம் ஒரு சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகள் என்றோ முப்பது வருடப் போரில் தமது மக்கள் சின்னாபின்னப்பட்டிருக் கிறார்கள் என்றோ நினைப்பதில்லை. தமது மக்களின் தேவைக்காக உழைக்காமல் வேறு யார் யாருக்காவோ செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதுபோலவே அவர்களுடடைய செயற்பாடு இருப்பதாகப்படுகிறது. மக்கள் அளித்த தெருத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அடித்து விட்டுச் செல்வது இவர்களின்வழக்கமாகிவிட்டது.
சுமந்திரன் மற்றும்
சிறீதரனின் நிலைப்பாடுகள்
மகிந்தவை உடன் நீக்காவிட்டால் அரச தலைவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுமந்திரன் குறிப்பிட்டது சாதாரண சிங்கள மக்களைக்கூடத் தமிழர் மீது கோபப்பட வைத்திருக்கிறது. சுமந்திரன் இப்படிக் கூறியதை விட மோசமாக ஒரு சிங்களவர் பேசியிருந்தால் அதை அவர்கள் கண்டுகொள்ளப் போவதில்லை. அண்மையில் கூட்டமைப்பினர் தமக்குள் நடத்திய கலந்துரையாடல் ஒன்றின்போது ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் காசிம், றிசாத் பதியுதீன், ஹெரான் விக்கிரமரட்ண, பேராசிரியர் மாறசிங்க, அஜித் பெரேர, இசான் விக்கிரமசிங்க ஆகியோர் அங்கு சென்று ‘’ரணிலுக்கு ஆதரவு என சத்தியக் கடதாசி தர வேண்டிய அவசியமில்லை எமக்கு ஆதரவுள்ள 122பேரும் 1 – 122வரையான இலக்கங்களைக் கையில் ஏந்தியவாறு காலி முகத்திடலில் அல்லது அரச தலைவர் மாளிகைக்கு முன்னால் நின்றால் ரணிலுக்கு இருக்கும் ஆதரவை பன்னாடடுச் சமூகத்துக்கு வெளிப்படுத்த முடியும் எனவே தவறாது இதில் கலந்து கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இவ்வாறு கருத்துரைத்தார், ‘‘இன்று உங்களுக்குள்ள பிரச்சினை ஆட்சியமைப்பது யார்? ஜனநாயகம் தப்பிப் பிழைக்குமா? என்ற சர்ச்சையே. ஆனால், எற்களன் பிரச்சினை வேறு. போர் முடிவடைந்து 9ஆண்டுகள் ஆகிவிட்டன. எமது அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறையில் வாடுகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட எமது மக்களின் காணிகள் விடுவிக்கப்ட வில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு இன்னும் தீர்வில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னம் நீக்கப்படவில்லை. பொறுப்புக் கூறப்பட வில்லை. உண்மை கண்டறியப்படவில்லை. எமது மக்களின் சார்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆகிய நாங்கள் குறைந்த பட்சம் நாடாளுமன்றில் சபா பீடத்துக்கு முன்னால்கூட ஒன்றுகூடிப் போராடவில்லை. இதை வெளியுலகுக்குக் காட்டுவதற்காக நாம் ஒன்றுகூடிக் கொழும்பில் போராட்டம் நடத்தவில்லை. தற்போது ரணிலைக் காப்பாற்றுவதற்காக ஒன்று திரண்டால் எமது மக்கள் எம் மீது உமிழ் நீரை உமிழ மாட்டார்களா?’’
சிறீதரனின் இந்த வார்த்தைகள் கடந்த மூன்றரை ஆண்டுகளாகக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு என்ன செய்திருந்தது என்பதை வெளிப்படையாக எடுத்துக் காட்டுவதாகவே அமைந்தது. ஆனால், 23.11.2018இல் நாடாளுமன்று கூடியபோது தெரிவுக்குழு அங்கத்தவர் விடயம் திடீரென வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தினேஸ் குணவர்த்தன முன்வைத்த ஆளும் கட்சியினருக்கே அதிக அங்கத்துவம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை 121அங்கத்தவர்கள் ரணிலுக்கு ஆதரசளித்த காரணத்தால்,நிராகரிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்ற 121பேரின் ஆதரவை உறுதிப்படுத்தியது. இந்த 121பேரில் மேலே சீறியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் அடங்கியுள்ளார்.