மும்மொழித் தேர்ச்சித் தகுதிப்பாட்டுப் பரீசீலனையுடன் உள்வாங்கப்படுகின்ற இலங்கைப் பொலிஸார் இற்றைவரைக்கும் சிங்கள மொழியிலேயே மக்களின் குற்றங்களையும், முறைப்பாட்டையும் பதிவு செய்து வருகின்றனர்.
பொலிஸாரின் இந்த மொழியறிவுப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே. முறைப்பாட்டைப் பதிவு செய்யும்போது முறைப்பாட்டில் தாம் சொல்வதைச் சிங்களத்தில் எழுதுகின்ற பொலிஸார், முறைப்பாட்டை முறைப்பாட்டாளர் கூறுவதுபோன்றே குறிப்பிடுவதில்லை என்பது இற்றைவரைக்கும் பிரச்சினையாகவே இருந்து வருகின்றது.
அத்தோடு குற்றங்களைப் பதிவு செய்யும்போது, குறிப்பாகப் போக்குவரத்துப் பொலிஸார் குற்றங்களைப் பதிவு செய்யும்போது இழைத்த குற்றமாகக் குறிப்பிட்டிருப்பது எதுவாக இருப்பினும் அது சிங்கள மொழியில் இருப்பதால் அதைச் சிங்களம் வாசிக்கத் தெரியாத எந்தவொரு நபரும் ஏற்றுக்கொண்டு ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே இங்கு நீடிக்கின்றது.
வடமாகாணத்தில் தமிழரை ஆளுகின்ற பொலிஸ், அரச துறையினர் எப்போது தமிழ் மொழியில் எழுதப்பழகுவார்கள். அல்லது அதை ஆங்கிலத்திலாவது எழுதுவதற்குரிய அறிவை எப்போது பெறுவார்கள்?