சாகும் தருவாயில் தாய்க்கு மெஸேஜ் அனுப்பிய மகன்! – நெகிழ்ச்சி சம்பவம்
ஃபுளோரிடா: ஆர்லாண்டோ தாக்குதலில் உயிரிழந்த இளைஞர் ஒருவர், இறக்கும் தருவாயில், ‘I’m gonna die’… என தன் தாய்க்கு மெஸேஜ் அனுப்பி வைத்த சம்பவம் பலரையும் நெகிழ்வடையச் செய்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில், ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அப்போது, திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த உமர் மாட்டீன் என்ற இளைஞர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காக அலறியபடி அங்குமிங்கும் ஓடினர். சிலர் கழிவறைகளுக்குள் புகுந்து மறைந்து கொண்டனர். இன்னும் சிலர் வெளியே ஓட்டம் பிடித்தனர். ஆனாலும், ஏராளமானவர்கள் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீஸ் படையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 53 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆர்லண்டோ நகர மேயர் தெரிவித்துள்ளார். ஓரினச் சேர்க்கையாளர்களை மையப்படுத்தி இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஐ.எஸ் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் இறந்த ‘எட்டி ஜஸ்டீஸ்’ என்ற இளைஞர் தான் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது தாய்க்கு அனுப்பிய நெஞ்சை உருகச் செய்யும் குறுஞ்செய்திகள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் தற்போது செய்திகள் வெளியிட்டுள்ளன.
உமர் மாட்டீன் துப்பாக்கியுடன் விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த நேரத்தில், மகளிர் கழிப்பறைக்குள் பதுங்கி இருந்துள்ளார் அங்கு கணக்காளராக பணியாற்றிவந்த 30 வயது ‘எட்டி ஜஸ்டீஸ்’. அடுத்த சில நிமிடங்களில் சரமாரியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ‘எட்டி ஜஸ்டீஸ்’ உள்ளிட்ட 50 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டிற்கு சில நிமிடங்களுக்கு முன் தான் இறக்கப்போவதை உணர்ந்துகொண்ட ‘எட்டி ஜஸ்டீஸ்’ தனது தாய் மினா ஜஸ்டீசுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இரவு 2:06க்கு அனுப்பிய முதல் குறுஞ்செய்தியில், தாய்க்கு தனது அன்பினை தெரிவிக்கும் வகையில் ‘Mommy I Love you’ என நெகிழ வைத்துள்ளார்.
அதன்பின், விடுதியின் கழிவறையில் தான் சிக்கிக் கொண்டது குறித்தும் அங்கே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடப்பது பற்றியும் தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கும் எட்டி, இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கச் சொல்லி இருக்கிறார்.
இந்த குறுஞ்செய்திகளைப் பார்த்து பதறிப்போன மினா ஜஸ்டீஸ், உடனே மகனின் தொலைபேசியை தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் அந்த அழைப்பை ஏற்காத எட்டி, அதனை தொடர்ந்து, தான் மறைந்திருந்த கழிவறைக்குள் இருந்தபடி அடுத்த குறுஞ்செய்தியை தன் தாய்க்கு அனுப்புகிறார். இறுதியாக எட்டி, ‘I’m gonna Die’ (‘நான் சாகப்போகிறேன்’) என தன்னை நோக்கி வரும் மரணத்தை, மன வேதனையுடன் குறுஞ்செய்தியாக அனுப்பி இருக்கிறார்.
தொடர்ந்து தன் மகன் எட்டியிடம் இருந்து வந்த குறுஞ்செய்திகளை கண்டு அலறிய மினா ஜஸ்டீஸ், தனது வீட்டில் இருந்து விரைந்து சென்று சம்பவம் நடந்த விடுதிக்கு வெளியே இரவெல்லாம் கண்ணீருடன் தனது மகன் உயிருடன் எப்படியும் மீட்கப்பட்டுவிடுவார் என நம்பிக்கையுடன் காத்திருந்திருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, துப்பாக்கிச்சூட்டில் எட்டி ஜஸ்டீஸ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதை கனத்த மனதுடன் போலீசார் உறுதி செய்தனர்.
இறக்கும் தருவாயில் தன் தாய்க்கு தன் மரணத்தை குறுஞ்செய்திகளாக அனுப்பிய இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி அனைவரின் நெஞ்சங்களையும் கனக்கச் செய்துள்ளது.