ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரை இலங்கையில் கடமையில் ஈடுபடுத்துமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் கோரியதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ரணில் விக்ரமசிங்க மிகவும் ஆச்சரியமான ஓர் கருத்தை வெளியிடுகின்றார்.
அவர் கூறுகின்றார் இலங்கையில் உள்ள அனைத்து தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை அழைத்து மிகவும் விசித்திரமான யோசனை ஒன்றை முன்வைக்கின்றார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் படையணியை இலங்கையில் கடமையில் ஈடுபடுத்துமாறு ரணில் கோருகின்றார்.
இந்தக் கோரிக்கையில் பிரதமர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க கையொப்பமொன்றையும் இடுகின்றார், எனினும் தற்பொழுது மஹிந்த ராஜபக்சவே நாட்டின் பிரதமராவார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் என்ற அடிப்படையில் கையொப்பமிடுவதற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.
வெளிநாட்டு இராணுவங்களை இலங்கைக்கு கொண்டு வருமாறு ரணில் கோருகின்றார்.
இலங்கையில் 30 ஆண்டுகளாக கடுமையான போர் நிகழ்ந்த காலத்திலும் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர் வரவுமில்லை எவரும் வருமாறு அழைக்கவும் இல்லை.
ரணிலுக்கு நாற்றுப்பற்று கிடையாது, தனது சுயலாப அரசியல் நோக்கத்திற்காக வெளிநாட்டுப் படையினரைக் கூட இலங்கைக்கு கொண்டு வர அவர் தயங்கவில்லை என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரை இலங்கையில் கடமையில் ஈடுபடுத்துமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணில் விக்ரமசிங்க கோரவில்லை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வலம் வரும் செய்திகளில் உண்மையில்லை எனவும், ரணில் அவ்வாறான ஓர் ஆவணத்தில் கையொப்பமிடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.