அனந்தி சசிதரனால் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி அவருக்கு பெருமை கிடைக்கிறதோ இல்லையோ அதனூடாக தமிழர்களுக்கு பெருமை கிடைக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே என மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்திற்கான இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளிர் அணிக்கான நிர்வாகத்தெரிவு வவுனியாவில் தமிழரசுக்கட்சி அலுவலகமான தாயகத்தில் நேற்று இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
வட மாகாணத்தில் மட்டுமல்ல இலங்கை முழுவதும் தற்போது அரசியல் பரபரப்பான நிலை காணப்படுகின்றது. எமது நாட்டில் தற்போது பல விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எமது முதலாவது வடக்கு மாகாண சபையும் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவடைந்துவிடுகின்றது. அத்துடன் இலங்கையில் தமது பதவிக்காலத்தினை முடிவுறுத்திய சபைகளாக 6 சபைகள் காணப்படுகின்றன.
அவ்வாறு பார்க்கும் போது பூர்த்தி செய்த மாகாணசபைகளுக்கான தேர்தல் வரவேண்டும். இந்த தேர்தலை மையமாக வைத்தே இந்த நாட்டில் அரசியல் பரபரப்பான நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையிலேயே அனந்தி சசிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு பெண் செயலாளர் நாயகமாக இருக்கின்ற முதலாவது கட்சி என்கின்ற பெருமை அவருக்கு கிடைத்ததாக சொல்லப்படுகின்றது. அந்த பெருமை அவருக்கு கிடைக்கிறதோ, இல்லையோ அதனூடாக தமிழர்களுக்கு பெருமை கிடைக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே.
இதேபோலவே முதலமைச்சரும் புலி வருது புலி வருது என்ற கதையாக இன்னும் புலியை காணவில்லை. அவர் ஒரு நாளைக்கு கூறுகின்றார் புதிய கட்சியை தொடங்கப்போகின்றேன் என்று. பின்னர் பொது அமைப்புக்களின் தலைவராக இருந்து செயற்படப்போவதாக தெரிவிகின்றார். அதன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிழை என்கின்றார். அதற்குமப்பால் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை தமிழ் தேசியக்கூட்டமைப்பு நிறுத்தினால் தான் கூட்டமைப்புக்குள் வருவதாக கூறுகின்றார். இவ்வாறு குழப்பிய கதையை அவர் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்.
இந் நிலையில் தான் எதிர்வரும் 24 ஆம் திகதி தனது அரசியல் எதிர்காலம் தொடர்பாக தெரிவிக்கப்போவதாக கூறுகின்றார். அதாவது தமிழ் மக்களினுடைய அரசியல் எதிர்காலம் பற்றியதாக அல்லாமல் தனது அரசியல் எதிர்காலம் தொடர்பாக அறிவிப்பதாக சொல்லியிருக்கின்றார். இவ்வாறாக வடக்கில் அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில் தென்பகுதியிலும் இந்த தேர்தலை மையமாக வைத்து பிரச்சனை போய்க்கொண்டிருக்கின்றது. அதாவது ஐ.தே.கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கிய இந்த அரசாங்கத்தினை சீர் குலைத்து இடைக்கால அரசாங்கத்தினை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணி முனைப்பு காட்டி வருகின்றது.
அத்துடன் தேர்தல் வரலாம் என்ற நிலையில் வெவ்வேறு கட்சிகள் பல அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இதற்குள் ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்த கதையும் போய்க்கொண்டிருக்கின்றது. வவுனியாவில் அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்களை அடிப்படையாக கொண்ட கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக செயல்பட வேண்டும். நாங்கள் தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்கின்றோம். அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணம் எங்களுடைய பிரதேசம்.
இந்த வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத்தில் நாங்கள் எங்களுடைய உரிமைகளை முழுமையாக அனுபவிக்க கூடியவர்களாக எங்களுடைய உரிமைகளோடு நாங்கள் எங்களை நாங்களே ஆளக்கூடிய வடக்கு கிழக்கு மாகாணத்திலே இருக்க வேண்டும் என்ற ஒரு கோட்பாடு தான் இவ்வளவு காலமும் அகிம்சையாக இருந்தாலும் சரி அல்லது ஆயுதம் ஏந்திய போராட்டமாக இருந்தாலும் சரி இதனை முன்னிறுத்தியே நடைபெற்றது என தெரிவித்தார்.