ரசிகர்களின் வன்முறை தொடர்ந்தால் இங்கிலாந்து, ரஷியா அணிகள் நீக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு எச்சரிக்கை
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இங்கிலாந்து–ரஷியா இடையிலான பரபரப்பான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மைதானத்திற்கு வெளியே ரகளையில் ஈடுபட்ட இங்கிலாந்து, ரஷிய நாட்டு ரசிகர்கள், ஆட்டம் முடிந்ததும் மைதானத்திற்குள்ளும் வன்முறையில் குதித்தனர். ரஷிய ரசிகர்கள், இங்கிலாந்து ஆதரவாளர்களை நோக்கி அடிக்க சீறிப்பாய்ந்தனர். இரு தரப்பினரும் மோதிக்கொண்டதுடன், கேலரியின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். இங்கிலாந்து ரசிகர்களே அதிகமாக தாக்கப்பட்டனர். இந்த களேபரத்தால் ஸ்டேடியமே போர்க்களமாக காட்சி அளித்தது. இந்த சம்பவத்தில் 35–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மூன்று நாட்களாக நடந்த ரசிகர்களின் அடாவடியால் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கடும் கோபம் அடைந்துள்ளது. இது தொடர்பாக நேற்று அவசர ஆலோசனை நடத்திய அந்த அமைப்பு, ‘‘ரசிகர்களின் வன்முறை நீடித்தால் இங்கிலாந்து, ரஷிய அணிகளை ஐரோப்பிய கால்பந்து தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்ய நேரிடும்’’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ரஷிய ரசிகர்களின் இடையூறு எதிரொலியாக அந்த நாட்டு கால்பந்து சங்கம் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு விசாரணையை தொடங்கி இருக்கிறது. அத்துடன் தங்கள் நாட்டு ரசிகர்களை பொறுப்புடனும், கண்ணியமாகவும் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்துமாறு ரஷியா மற்றும் இங்கிலாந்து கால்பந்து சங்கங்களை கேட்டுக்கொண்டுள்ளது.