எழுக தமிழரே நீதி கேட்டு ஐ.நா நோக்கி – இயக்குனர் கௌதமன்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிந்து 08 ஆண்டுகள் முடிவுற்ற போதும் நீதிக்கான நெடும் பயணத்தில் பெரும் போராட்டத்தின் மத்தியில் சளைக்காமல் தமிழ் இனம் தமக்கான விடியலை மற்றும் விடுதலையைத் தேடி ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
ஆனாலும் கடந்த ஆண்டுகளில் காணப்பட்ட பெரும் எழுச்சி கொஞ்சம் கொஞ்சமாக நம் தமிழ் மக்களின் மனங்களில் தேய்ந்து கொண்டு போகின்றது எனும் செய்தி நம் மனதில் எட்டும் போது நெஞ்சம் துடிக்கிறது.
நாம் இழந்த இழப்பினை, நம் மண்ணை, நம் உரிமையை, நம் உறவுகளின் விலைமதிக்க முடியாத உயிர்களை மற்றும் இவற்றுக்கு மேல் நமக்கான சுகந்திரத்தை, இது அத்தனையையும் இழந்து நிற்கும் நிலையில் ஒரே ஒரு நொடி நடந்து முடிந்த கடந்த கால அந்த வீரம் நிறைந்த மிகப் பெரிய உன்னதமான விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக உயிர் கொடுத்த கிட்டத்தட்ட 68 ஆயிரம் மாவீர்களின் உயிர் இழப்புக்களை மனதில் தாங்கும் போது எந்தத் தமிழனாலும் நிம்மதியாக தூங்க முடியாது.
இதை நினைக்கும் போது திடீரென ஒரு கருநாகம் விறைப்பாக எழும்பி படம் எடுத்து நின்றால் எப்படி இருக்குமோ அப்படி சீற்றத்தோடு மனதுக்குள் பெரும் கோபம் கொப்பளிக்கின்றது.
சிங்கள அதிகார வர்க்கங்களினால் நம் உறவுகள் நம் கண் முன் எவ்வாறு சிதறி சின்னாபின்னமாய் போனது என நினைத்தால் நம் உறவுகள் ஒருபோதும் சோர்ந்து போய்விடாது.
இந்த உலகில் யாருக்குமே கிடைக்காத அரும்பெரும் தலைவன், நம் தாய்க்கும் தாய்மொழிக்கும் சமமான, நமது தமிழீழ தேசிய தலைவன் பிரபாகரன் நம் இனத்தில் தோன்றிய உன்னத தலைவன்.
நாம் வாழும் நம் சமகாலத்தை விட அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்ற பெயர் எல்லாத் தமிழருக்கும் கிடைக்காது.
இருப்பினும் போர் முடிவுற்று 08ம் ஆண்டு நிறைவிலும் கூட நாம் இன்னும் உக்கிரத்துடனும் உறுதியுடனும் சொல்ல முடியாத ஒரு பலத்துடனும் போராட வேண்டியுள்ளது.
இந்த உலகம் அதிகாரவர்க்கத்துக்கு துணைபோகும் நாடுகளுடைய எண்ணிக்கையும் அதிகமாக காணப்படும் சூழலில் நீதியையும் தர்மத்தையும் உண்மையான இறையான்மையையும் சுமந்து நிற்கும் மற்றும் இயற்கையின் கொடையாக பெற்ற இந்த தமிழினம் ஒருபோதும் சளைத்துவிடக் கூடாது.
இனியும் இந்த உலகம் தாமதித்தால் இந்தப் பூமிப்பந்தின் ஆதியினம், உலகில் மூத்த மொழியைப் பேசுகின்ற ஒரு உன்னதமான இனம், யாருக்கும் இல்லாத வரைபடமும் வரலாறும் கொண்ட இனம் ,மற்றும் இன்னும் கலை, கலாச்சாரம், நாகரீகம், ஒழுக்கம், வீரம், அறத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அற்புதமான இனம் தமிழினம் இனி வரும் இளைய தலைமுறை, முன்னோக்கிச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த உலகம் தமிழரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் தொலைவில் இல்லை. அந்த நேரம் கட்டாயம் வரும். அது வரைக்கும் பொறுமையாக இருப்போம். பொறுத்தது போதும் எனும் நிலை வரும் போது என்ன முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதை தமிழினம் உறுதியாய் சரியாக எடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் கோடான கோடித் தமிழர்களில் நானும் ஒருவன்.
ஜநா முன்றலில் முருகதாஸன் திடலில், வரும் 20ம் திகதி 02.00 – 06.00 மணி வரை ஒன்றாக திரளுவோம். தமிழனின் உரிமையையும் விடியலையும் மற்றும் விடுதலையையும் மீட்டு எடுக்க அந்தக் களத்தில் நின்று போராடுவோம். குரல் கொடுப்போம் என இயக்குனர் கௌதமன் தமிழ் மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளார்.