“easy entertainment night 2018” மாபெரும் இசை நிகழ்சசி வருகின்ற சனிக்கிழமை தமிழிசை கலா மன்றத்தில் நடைபெற சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டு உள்ளது .முதல் தடவையாக புகழ்பூத்த “நட்சத்திரா” இசைக்குழுவுடன் இணைந்து பல பாடல்களினை மட்டுமன்றி பல முன்னணி நடிகர்களின் படங்களில் தனது வசீகர குரலின் மூலம் படங்களின் வெற்றிக்கு பின்னணி குரல் கொடுத்த கலாமணி, நடிகர், பாடகர் , பின்னணி குரல் வித்தகர் எஸ். என் சுரேந்தர் அவர்கள் கால் பதித்துள்ளார். நட்சத்திரா இசைக்குழு ஏராளமான இசை நிகழ்ச்சிகளை கனடாவில் நிகழ்த்தியிருக்கின்றது. ஆகையால் நிகழ்ச்சியின் தரம் இமயத்தினை தொடும் என்பதில் ஆச்சரியம் இல்லை.
எஸ்.என்.சுரேந்தர்:
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனால் தனக்குப் பிடித்த குரல் என்ற பாராட்டைப் பெற்றவர். 1980 களின் ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையில் நிறைய பாடல்களை பாடியிருக்கிறார்.நடிகர் மோகனுக்கு தொடர்ந்து பின்னணி பேசியவர்.நடிகர் விஜயின் தாய் மாமாவான இவர்,விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் ‘பூவே பூவே பெண்பூவே’ என்ற பாடலையும் ப்ரியமுடன் படத்தில் “ஒயிட் லகான் கோழி” பாடலையும் பாடியிருக்கிறார்.
இவரின் சில பாடல்கள்:
தேவன் கோவில் தீபம் ஒன்று -நான் பாடும் பாடல்
தனிமையிலே ஒரு ராகம் – சட்டம் ஒரு இருட்டறை
மாமரத்து பூவெடுத்து,கண்மணி நில்லு – ஊமை விழிகள்
பாரிஜாத பூவே – என் ராசாவின் மனசில
பாடகர், நடிகர், பின்னணிக்குரல் கலைஞர். இவர் இத்துறையில் பின்னணி பாடகனாகவோ, நடிகனாகவோ வேண்டும் என்றுதான் விருப்பப்பட்டார். ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ படத்தில் டூயட் பாடியதிலிருந்து சில படங்களில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. டப்பிங் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது எதிர்பாராத விதம்தான். பின்னர் டப்பிங் கொடுப்பதே இவரை பிஸியாக வைத்தது. லலிதா ரங்காராவ் என்ற டப்பிங் கலைஞருக்கு இவர் பாடகர் என்பது தெரிந்த விஷயம். கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘அதிசய மாப்பிள்ளை’ படத்திற்கு ஒரு கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுக்க ஒருவர் தேவை என்று அவர் நினைத்து, தயாரிப்பாளர்களிடம் இவரை சிபாரிசு செய்தார். அதுவே இவர் குரல் கொடுத்த முதல்படம்.
அடுத்து ‘பெண்ணின் வாழ்க்கை’ நேரடித் தமிழ்ப்படத்திற்கு இவர் குரல் கொடுத்த முதல் படம். அதில் வில்லனுக்குக் குரல் கொடுத்தார். அதையடுத்து கதாநாயகனாக நடித்தவருக்கே குரல் கொடுக்கும் வாய்ப்பு இவரைத் தேடிவந்தது. அதன்படி விஜய்பாபு, மோகன், சங்கர், பிரதாப் போத்தன், ரவீந்தர் உள்பட பல கதாநாயகர்களுக்குக் குரல் கொடுத்தார். நடிகர் ‘மைக்’ மோகனுக்கு 85 விழுக்காடு படங்களில் பின்னணிக்குரல் கொடுத்தது இவரே. சுமார் 600 படங்களுக்கு மேல் இவர் குரல் கொடுத்துள்ளார். தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சுமார் 500 பாடல்கள் பாடியுள்ளார்.
இவர் நடிகர் விஜய்-யின் தாய் மாமனார் ஆவார்.
சுரேந்தரின் சினிமா வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் புகழ்மிகு பின்னணிக் கலைஞர் லலிதா ரங்காராவ். ‘அதிசய மாப்பிள்ளை’ கன்னடப்படத்தின் தமிழ் வடிவத்துக்கு, இரண்டாம் நாயகனின் வாயசைப்புக்கு குரல்கொடுத்து, டப்பிங் துறையில் கால் பதித்தார் சுரேந்தர். ‘நீ பேசுவதே பாடுவதுபோல இருக்கிறது’ என்று பாராட்டியிருக்கிறார் ஒலிப்பதிவுப் பொறியாளர். அந்தப்படத்தில் இவர் பேசிய முதல் வசனம், ‘லலிதா!’ என்று நாயகியை அழைப்பதாக அமைந்தது. அம்மாவின் பெயர் லலிதா- டப்பிங் துறைக்கு அறிமுகப்படுத்தியவர் லலிதா- முதல் வசனம் ‘லலிதா!’ என்பதில் உருகினார் சுரேந்தர். அன்று தொடங்கிய பின்னணிக்குரல் பணி, சுரேந்தரை முன்னணிக்குக் கொண்டுவந்தது. புகழ்மிகு பின்னணிக்குரல் கலைஞர் ஹேமமாலினி, இவருக்கு பரிந்துரை செய்து படவாய்ப்பு வாங்கிக் கொடுத்ததை நன்றியுடன் குறிப்பிடுகிறார். இவர் குரல் கொடுத்த முதல் நேரடி தமிழ்ப்படம் ‘ஒரு கை ஓசை’.
‘மோகனுக்குக் குரல் கொடுப்பவர்’ என்று அடையாளம் சொல்லுமளவுக்கு 75 படங்களில் மோகனுக்கு குரல் கொடுத்திருக்கிறார் இவர். பின்னாளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், ‘மனிதன் மாறிவிட்டான்’ படத்தில் மோகனுக்காக சிலர் குரல் கொடுத்துப் பார்த்தார்கள். இறுதியில் சுரேந்தர்தான் பேசினார். மோகனுக்காக இவர் குரல் கொடுத்த முதல் படம் ‘பஞ்சமி’. அது வெளிவரவில்லை. ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் மோகனுக்குக் குரல்கொடுக்க முதலில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கேட்டார்கள். அவர் மறுத்துவிடவே, அந்த வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
இயக்குநர் மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில், பிரதாப் போத்தனுக்குக் குரல் கொடுக்க 40 பேர் வரிசை கட்டியதில், இயக்குநர் தேர்ந்தெடுத்த குரல் இவருடையது. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் விடலை கொஞ்சும் கார்த்திக், இவரது குரலில்தான் பேசினார். ‘தங்கைக்கோர் கீதம்’ படத்தில் ஆனந்த்பாபு உள்பட டி.ராஜேந்தர் படத்து ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் சுரேந்தர்தான் ஆஸ்தான பின்னணிக் கலைஞர். ‘காதல் ஓவியம்’ படத்தில் நாயகன் கண்ணன் இவர் குரலில் பேசினார். ரகுமானுக்கும் இவரது குரல் பொருந்தி வந்தது. ‘அந்நியன்’ படத்தில் நெடுமுடி வேணுவுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.
‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சாட்சி’, ‘வெற்றி’, ‘ஏமாறாதே ஏமாற்றாதே’, ‘சபாஷ்’ படங்களில் இவரது குரல்தான் விஜயகாந்துக்காக ஒலித்தது. ‘சட்டம் ஒரு இருட்டறை’யில் இவர் பாடிய ‘தனிமையிலே ஒரு ராகம்…’தான் விஜயகாந்துக்கு முதல் வெற்றிப்பாடல். ‘சென்னை 600028’ படத்தில் ஜெய்க்கு அப்பாவாக நடித்தது உள்பட ஐந்து படங்களில் நடித்திருக்கும் சுரேந்தருக்கு இன்றைய நாயகர்களுடன் நடிக்கவேண்டும் என்பது கலைவிருப்பம்.இன்றைய இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிப் பாடவேண்டும் என்பது குறிக்கோள்.
‘சிறைப்பறவை’யில் இளையராஜா இசையில் யேசுதாசுடன் பாடிய ‘ஆனந்தம் பொங்கிட…’, ‘ஊமை விழிகள்’ படத்தில் மனோஜ் கியான் இசையில் சசிரேகாவுடன் இணைந்த ‘கண்மணி நில்லு…’, ‘மாமரத்து பூவெடுத்து…’ மற்றும் ‘குடுகுடுத்த கிழவனுக்கு…’, ‘நட்பு’ படத்தில் இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவனுடன் சேர்ந்த ‘சிங்கம் ரெண்டும் சேர்ந்ததடா…’, ‘நான் பாடும் பாடல்’ படத்தில் இளையராஜா இசையில் ஜானகியுடன் பாடிய ‘தேவன் கோவில் தீபம் ஒன்று…’, ‘சேது’வில் இளையராஜா இசையில் ‘அண்ணன் சேதுவுக்கு…’ மற்றும் ‘மாலை என் வேதனை கூட்டுதடி…’, ‘சிக்காத சிட்டொன்று…’, ‘திருப்பதி எழுமலை வெங்கடேசா’வில் எஸ்.ஏ .ராஜ்குமார் இசையில் மனோ, வடிவேலுவுடன் பாடிய ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…’ ‘நிலாவே வா’வில் வித்யாசாகருடன் இணைந்து பாடிய ‘அக்குதே அக்குதே…’, ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் தேவா இசையில் சித்ராவுடன் கைகோர்த்த ‘பூவே பூவே பெண் பூவே…’, ‘ரசிகன்’ படத்தில் தேவா இசையில் ஸ்வர்ணலதாவுடன் குரல்கொடுத்த ‘சில்லென சில்லென நீர்த்துளி பட்டு…’, ‘தீ’ படத்தில் ‘சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு…’ ரஜினியின் ‘வள்ளி’ படத்தில் இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவனுடன் பாடிய ‘வள்ளி வரப் போறா…’, ‘இன்னிசை மழை’ படத்தில் இளையராஜாவுடன் பாடிய ‘மங்கை நீ மாங்கனி…’, ‘சிகரம்’ படத்தில் எஸ்.பி.பி இசையில் சைலஜாவுடன் ‘முத்தமா…’, எஸ்.பி.பி சைலஜாவுடன் பாடிய ‘ஏதோ ஏதோ…’, ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் சித்ராவுடன் ‘பாரிஜாதப் பூவே அந்த தேவலோகத் தேனே…’, ‘இதயம்’ படத்தில் தீபன் சக்கரவர்த்தியுடன் ‘ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…’, ‘காதலுக்கு மரியாதை’யில் ‘ஆனந்தக் குயிலின் பாட்டு…’ ‘ப்ரியமுடன்’ படத்தில் ‘ஒய்ட்டு லக்கான் கோழி ஒண்ணு கூவுது…’, ‘கோபுர வாசலிலே’வில் ‘தேவதை போலொரு பெண்ணிங்கு…’, ‘வசந்தராகம்’ படத்தில் ‘ஒரு தெய்வம் நேரில் வந்தது…’, ‘நான் உள்ளதைச் சொல்லட்டுமா…’, ‘நீதிக்குத் தண்டனை’யில் ‘மனிதர்களே ஓ மனிதர்களே…’ என சுரேந்தரின் சுந்தரக்குரல் இசை விரும்பிகளைக் கவர்ந்து வருகிறது.
‘கலைமாமணி’ கவுரவம் பெற்ற இவருக்கு 2005ல் சிறந்த பின்னணிக்குரல் கலைஞருக்கான தமிழக அரசு விருது கிடைத்தது. 500க்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் குரல், 400க்கும் அதிகமான மொழிமாற்றுப் பாடல்கள், 4000க்கும் கூடுதலான மேடைக் கச்சேரிகள் என திரைவலம் வரும் சுரேந்தர் நடத்திவரும் ‘சுகமான ராகங்கள்’ இசைக்குழு, இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.