கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு வங்கதேச பிரதமராக கலீதா ஜியா பதவி வகித்து வந்தார். அப்போதைய எதிர்கட்சியான அவாமிலீக் கட்சியின் ஷேக் ஹசீனா பேரணி ஒன்றை நடத்தினார். அப்போது அங்கு குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் ஷேக் ஹசீனா படுகாயத்துடன் உயிர் பிழைத்தார். அதே நேரத்தில் 24 பேர் மரணம் அடைந்தனர். சுமார் 500 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்த வழக்கில் டாக்கா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் 19 பேருக்கு மரணதண்டனை, 19 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 11 பேருக்கு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரகுமானும் ஒருவர் ஆவார்.
தண்டனை பெற்ற தாரிக் ரகுமான் வங்க தேச எதிர்க்கட்சியான பங்களா தேச நேஷனல் பார்ட்டியின் சேர்மன் ஆவார். இவர் கடந்த 2008 வருடம் வங்க தேசத்தை விட்டு தப்பிச் சென்று லண்டனில் அடைக்கலம் புகுந்துள்ளார். இன்று தீர்ப்பு தினத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தும் என்பதால் கடுமையன பாதுக்காப்புடன் நீதிபதி சாகப் நூருதின் தீர்ப்பு வழங்கி உள்ளார்.