பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் செயற்பாடுகளை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்து ள்ளார். சரத் பொன்சேகா, அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்புடன் நடக்கவில்லை என்றும் அரச தலைவர் மைத்திரிபால சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரச தலைவர் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அரச தலைவர், பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் கோமாளித்தனமாக அமைந்துள்ளன என்றும், அரசை தர்மசங்கடத்துக்கு ஆளாக்குகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.
அவரது செயற்பாடுகள் அரச தலைவரான என்னைத் தர்மசங்கடத்துக்குள் தள்ளியுள்ளது. அதேபோன்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவும் தர்மசங்கடத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இத்தகைய நிலமை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. பொலிஸாரது
நடவடிக்கைகள் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று அரச தலைவர் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொல்வதற்குச் சதி இடம்பெற்றது ஏன்று தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் அந்த விடயத்தில் குற்றஞ்சாட்டப்படும் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவுடன் பொலிஸ் மா அதிபர் நட்புறவைக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வுப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் பொலிஸ்மா அதிபரிடமும் வாக்கு மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றுமு் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலேயே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபர் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதேவேளை சட்டம் ஒழுங்கு அமைச்சை அரச தலைவர் மைத்திரிபால தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.