பிரித்தானிய தூதுவர் – விக்னேஸ்வரன் சந்திப்பு! சுயாட்சி தொடர்பில் பேச்சு!
தமிழ் மக்களுக்குப் போதிய அளவிலான சுயாட்சிக்குரிய ஏற்பாடுகள் இலங்கைக்கான புதிய அரசியலமைப்பில் செய்யப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து வடமாகாணத்தில் சமாதானத்திற்கான நடவடிக்கைகள் எவ்வாறிருக்கின்றன என கேட்டறிந்துள்ளார்.
அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டறிந்தார்.
சமாதான முயற்சிகளுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்த போதிலும், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல தாமதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், முக்கிய விடயங்களில் தங்களைக் கலந்தாலோசிக்காமலும், முக்கிய நடவடிக்கைகளில் தங்களுடைய பங்களிப்பின்றியும் முன்னெடுக்கப்படுவதாக பிரித்தானிய தூதுவரிடம் எடுத்துக் கூறியிருப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ள மக்களின் நிலைமைகளையும், நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களின் நிலைமைகளையும் எடுத்து நோக்கினால் மொழி, மதம், கலை கலாசாரம் என பல விடயங்களிலும் இந்த வித்தியாசம் காணப்படுவதாகவும், எனவே, வடக்கு கிழக்குப் பிரதேச மக்களின் பின்புலத்திற்கு ஏற்ற வகையில் அவர்களே நடவடிக்கைகளை எடுக்கவும், அவர்களுடைய பொருளாதாரச் செயற்பாடுகளை அவர்களே பார்த்துக்கொள்ளத்தக்க வகையிலும் இடமளிக்கப்பட வேண்டும் என விக்னேஸ்வரன் பிரித்தானிய தூதுவரிடம் கூறியுள்ளார்.
தற்போதைய அரசியல் மற்றும் சிவில் நிலைமைகள், மக்களின் பொதுவான எதிர்பார்ப்பு போன்ற விடயங்கள் குறித்து பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பண விஜயத்தின் போது பல தரப்பினரிடமும் கேட்டறிந்துள்ளார்.