நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாள் இன்று. மக்கள் திலகம் எம்ஜிஆரின் பார்வையில் சிவாஜி பற்றிய சில நினைவுகள் இதோ…
சிவாஜியை அமெரிக்கா சிறப்பு விருந்தினராக தனது நாட்டுக்கு அழைத்து பாராட்டியது. ஹாலிவுட் நடிகர்கள் சிவாஜியை சந்தித்து மகிழ்ந்தார்கள். இந்த உயரிய பெருமைக்கு பிறகு இந்தியா திரும்பிய சிவாஜிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர், பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தினார். அப்போது நடிகர் சங்கத்தின் சார்பில் வெளிவந்து கொண்டிருந்த நடிகன் குரல் என்ற பத்திரிக்கையில் சிவாஜி பற்றி எம்.ஜி.ஆர் எழுதியிருந்ததின் சில பகுதிகள்…
தேர்ந்துகொள்ளும் துறையில் புகழோடு விளங்கியவர். புகழ் குன்றின் சிகரத்தில் பொன்னொளி வீசும் கலைச் செம்மலாய் திகழ்ந்தவர் சிவாஜி.
தனது கதாபாத்திரத்துக்கான நடிப்பால் மக்கள் மனதில் தன்னை நிலைநிறுத்தி கொண்டு விடுவார் .அவர் இயற்கையை மீறிய இயற்கையான நடிப்பு திறன் கொண்டவர்.
ஆண் ஒரு ஆணாக நடிப்பது இயல்பு. ஆனால், வாலிப வயதை அடைந்த ஓர் ஆண், பெண்ணாக நடிப்பது அத்தனை சுலபமல்ல. இனிமையான இளங் குரல், கடினமாக மாறிவிட்ட பருவத்தில் இயற்கைக்கே எதிராக, இயற்கையோடு போராடி, இயற்கையாக நடித்துப் புகழ்பெற்றார்.
நாடக மேடையில் எல்லாவிதமான வேடங்களிலும் தனிச்சிறப்போடு நடித்து, ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கும் நாடகக் கலைக்கும் தனது நடிப்பால் பொலிவூட்டியவர். மேடையில் சண்டைக் காட்சிகளிலும் துணிந்து நடித்தவர்.
நல்ல குணங்கள் கொண்டக் கதாபாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம்பெறுவது எளிது. ஆனால், மக்களால் வெறுக்கப்படும் கதாபாத்திரத்தைத் தாங்கி, மக்கள் இதயத்தில் இடம்பெறுவது சாதாரண விஷயமல்ல. திரும்பிப் பார் படத்தில் முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றார். பல பெண்களை ஏமாற்றும் கதாபாத்திரம் அது. ஆனால், படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் காண்போரை தன்பால் ஈர்த்துக்கொள்ளும் அளவுக்கு, ஆங்கிலப் பாணி நடிப்பு என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார்.
எந்த நிலையிலும் தான் ஏற்றுக்கொண்ட கலைத் தொழிலில் தனக்கென்று ஒரு இடத்தை பெறக்கூடிய தகுதி அவரிடம் வேரூன்றியிருந்தது.
உலக வல்லரசுகளுக்கிடையே முக்கியமான அமெரிக்கா, ஒரு தமிழ் மகனை, அதிலும் நாடக மேடையிலிருந்து சினிமா நடிப்புக் கலையில் சிறந்து நிற்கும் கலைஞனை அரசாங்க விருந்தினர் என்ற அந்தஸ்தோடு அழைத்துப் பெருமைப்படுத்தியது, இதுவரை எந்தத் தமிழ் நடிகனுக்கும் கிடைக்காத பெரும் பேறு.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும் சிவாஜி கணேசன் யார் என்ற கேள்வி பிறக்கும்போது, அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப் பண்பாடு!” என்ற பதில் தான் கிடைக்கும். அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா.