பல்குழல் ரொக்கட்டுகளை இலங்கைக்கு விற்பனை செய்ய இரண்டு நாடுகள் மறுப்பு
இலங்கை ராணுவத்தினருக்குத் தேவையான பல்குழல் (மல்டிபெரல்) ரொக்கட்டுகளை விற்பனை செய்வதற்கு இரண்டு நாடுகள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
அண்மையில் அவிசாவளை அருகே சாலாவ இராணுவக் களஞ்சியம் வெடித்துச் சிதறியதில் அங்கிருந்து அனைத்து வகை ஆயுதங்களும் அழிந்து போயுள்ளன.
அதிலும் குறிப்பாக அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 20 ஆயிரம் கிராட் ரொக்கட்டுகள் முற்றாக அழிந்துள்ளன. இந்த வகை ரொக்கட் எறிகணைகள் மல்டிபெரல் கனரக பீரங்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரொக்கட் வகையாகும்.
விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது இராணுவத்தினரின் கை ஓங்கி நிற்பதற்கு மல்டி பெரல் தாக்குதல்களே காரணமாக இருந்திருந்தன.
இந்நிலையில் இறுதிப் போரின் போது இராணுவத்தினர் பொதுமக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தியதாக ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் தனது அங்கத்துவ நாடுகள் இலங்கைக்கு கிராட் ரொக்கட்டுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதித்துள்ளது.
இலங்கை இராணுவத்தினர் இதுவரை காலமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளான செக் குடியரசு மற்றும் ஸ்லோவெக்கியா நாடுகளிலிருந்தே கிராட் ரொக்கட்டுகளைப் பெற்று வந்திருந்தனர்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை காரணமாக குறித்த நாடுகள் இலங்கைக்கு கிராட் ரொக்கட்டுகளை விற்பனை செய்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக இலங்கை இராணுவத்தினரின் ஆயுத வலிமையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.