மதுரை மாட்டுத்தாவணி, கீழ வடம்போக்கி தெரு ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தேங்காய் கமிஷன் கடைகள் உள்ளன. இங்குள்ள மார்க்கெட்களுக்கு பொள்ளாச்சி, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் டன் கணக்கில் தேங்காய் வரத்துள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து உயர்ந்துள்ளது. கடந்த மாதம் நடுத்தர தேங்காய் ₹25 வரை விற்று வந்தது. தற்போது ₹12க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து மதுரை சென்ட்ரல் காய்கறிகள் மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கடந்த 2 வாரங்களாக பொள்ளாச்சி தேங்காய் வரத்து வழக்கத்தைவிட அதிகளவில் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே நிலவிய வறட்சி காரணமாக தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு, காய் வளர்ச்சியின்றி வரத்து குறைவாக இருந்தது. தற்போது தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. தேங்காய் சிறியது ₹10, நடுத்தரம் ₹12, பெரியது ₹15க்கு விற்பனையாகிறது’’ என்றனர்.