ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பீட்ரூட் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால், பீட்ரூட் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைகிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படுகிறது. நீலகிரியில் ஆண்டு தோறும் பீட்ரூட் சுமார் 405 ஹக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதனிடையே ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான நஞ்சநாடு, கல்லக்கொரை ஆடா, தேனாடுகம்பை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சீசனில் பீட்ரூட் அதிகளவு பயிரிடப்பட்டன. இவை தற்போது அதிக விளைச்சலை தந்துள்ள நிலையில் பீட்ரூட் அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மார்க்கெட்டுக்கு அதிகளவில் பீட்ரூட் வருவதால் அதன் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் இந்த சீசனில் பீட்ரூட் அமோக விளைச்சலை தந்துள்ளது. இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன் கிலோ ₹30 வரை விற்ற பீட்ரூட் தற்போது கிலோ ₹6 ஆக சரிந்துள்ளது, என்றார்.