ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் தனியார் மற்றும் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஆணைக்குழுகளை நியமித்து அதனூடாக சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்காக எடுக்கும் நடவடிக்கையை நான் வரவேற்கின்ற அதேவேளை எங்களுடைய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் ஒர் சம்பள நிர்ணய சபையை அமைத்து அவர்களுக்கான வேதனத்திற்கான உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வராதது ஏன் என்ன மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தலவாக்கலையில் 23.09.2018 அன்று காலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சம்பள போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமயங்களும் ஒன்றாக மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அனைத்து துறைகளிலும் சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும்.
ஆனால் எங்களுடைய பெருந்தோட்ட தொழிலாளர்களின் நிலை அவ்வாறு இல்லை. நாங்கள் எதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும் அதற்காக போராட்டம் செய்தே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருக்கின்றது.
இது அடிமைகளாக இருக்கின்றவர்களின் நிலை போலவே இருக்கின்றது. ஏனையவர்கள் சம்பள போராட்டம் செய்யும் போது அதற்காக குரல் கொடுக்கும் அணைவரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு குரல் கொடுப்பதில்லை. இதற்கு காரணம் என்ன நாங்களும் இந்த நாட்டு பிரஜைகளே.
இந்த நாட்டினுடைய அபிவிருத்தி முதல் ஆட்சியமைப்பதற்கு அரசாங்கங்களை கொண்டு வருவது முதல் எங்களுடைய பங்களிப்பை வழங்கி வருகின்றோம்.
ஆனால் எங்களுக்கு என்று பிரச்சினைகள் வரும் பொழுது நாங்கள் ஓரம் கட்டப்படுகின்றோம்.
இதனை இந்த அரசாங்கம் மட்டுமல்லாது இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் இதனையே பின்பற்றி வருகின்றது.
எனவே இந்த நிலையில் மாற்றம் வேண்டும். நாங்கள் 2 வருடத்திற்கு ஒரு முறை எங்களுடைய ஊதியம் உயர்விற்கு போராட்டம் செய்ய முடியாது. ஏனையவர்களுக்கு என்ன நடைமுறை இருக்கின்றதோ
அது போன்று ஒரு நடைமுறையை எங்களுக்கும் அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று பெருந்தோட்ட கம்பனிகள் பல தேவையற்ற செலவீனங்களை செய்வதை நாங்கள் பார்க்கின்றோம். தோட்டங்களை முறையாக பராமரிப்பதில்லை.
உரிய நேரத்திற்கு அதற்கான பசளைகளை இடுவதில்லை. இப்படி தோட்ட நிர்வாகங்கள் செய்கின்ற குறைபாடுகளுக்கு எங்களுடைய மக்கள் எந்த விதத்திலும் பலிகடாவாக முடியாது.