ஒவ்வொரு முஸ்லிமும் மரத்தைப் போன்று பயன்தரக் கூடிய ஒரு வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தெரிவித்தார்.
கண்டி பொல்கொல்ல NICD மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (2018.09.23) நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் இதனைக் கூறினார்.
மரம் இயற்கை சீற்றங்களின் போது தனியாக நின்று முகம்கொடுக்கின்றது. வெளித் தாக்கங்களின் போது அது சலைத்துப் போவதில்லை. அது தனது சூழலிலிருந்து அனைத்தையும் தனது வாழ்வுக்காக எடுத்துக் கொள்கின்றது. இருப்பினும், எடுத்துக் கொள்வதை விடவும் அது தன்னைச் சூழவுள்ளவர்களுக்கு வழங்குகின்றது.
தன்னைச் சூழவிருப்பவர்களுக்கு அது குறைவில்லாமல் நன்மைகளை வழங்கிக் கொண்டே இருக்கின்றது. அதற்கு தீங்கு செய்தாலும், அத்தகையவர்களுக்கு அது நன்மையே செய்கின்றது. அது எந்த ஒருவரிடமும் பிரதி உபகாரத்தை எதிர்பார்த்து எதனையும் வழங்குவதில்லை.
மரம் இறந்த போதும் அது வீட்டிற்கே எடுத்துச் செல்லப்படுகின்றது. மட்டுமல்லாது, மரத்தின் மரணத்தின் பின்னரும் அது அழகுபார்க்கப்படுகின்றதே அல்லாமல் அதனை வீணாகக் கருதுவதில்லை. மனிதன் மரணித்தால் நிலத்துக்கடியில் போடப்படுகின்றான்.
அல்லாஹ் நல்ல கலிமாவுக்கும் மரத்தையே உதாரணமாக கூறுகின்றான் எனவும், மனிதன் மரத்திலிருந்து பாடம் படிக்க நிறையவே இருக்கின்றன எனவும் ஜமாஅத்தின் அமீர் மேலும் கூறினார்.