ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் வெளிப்படையாகவே கருத்து வேறுபாடுகள் உள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கி எவ்வாறு வழிநடாத்த முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நடாத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒழுங்கான தலைமைத்துவம் ஒன்று இல்லாமையே டொலர் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கும் காரணமாகும். நாம் நாட்டை கையளிக்கும் போது டொலர் ஒன்றின் பெறுமதி 131 ரூபாயாகவே காணப்பட்டது.
தற்பொழுது அது 170 ரூபாவையும் தாண்டிச் சென்றுள்ளது. நாட்டின் தலைவர்கள் இந்த டொலர் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறுவதாயின் அரசாங்கம் ஒன்று எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்தது போதும் எனவும், தம்மிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறும் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.