கிராமம் ஒன்றில் தம்பதியருக்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
கடும் வறட்சி காரணமாக கிராமம் ஒன்றில் முருங்கை இலைகளை அவித்து சாப்பிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செய்தியை ஊடகத்தில் பார்த்த ஜனாதிபதி மிகவும் மனம் வருந்தியதுடன், நாட்டு மக்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
கஹடகஸ்திலிய மற்றும் கலேன்பிந்துவெவ பிரதேச மக்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட அதிகாரிகளை கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு குடிமகனும் முருங்கை இலைகளை சாப்பிட்டு வாழ அனுமதிக்க முடியாது.
ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டால் அந்த கிராமத்தில் எத்தனை கிராம சேவகர் பிரிவு இருக்கும். அதிகாரிகள் உள்ளனர், நாடாளுமன்ற, பிரதேச உறுப்பினர்கள் உள்ளனர்.
அனைவரும் கிராமங்களில் என்ன நடக்கின்றதென அவதானமாக இருக்க வேண்டும். இந்த விடயம் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகின்றேன்.
சாப்பிட முடியாத ஒன்றை சாப்பிட்டு கொண்டு வாழும் மக்கள் ஏதாவது ஒரு கிராமத்தில் உள்ளார்கள் என்றால் அது மிகப்பெரிய கொடுமையான விடயமாகும்.
ஜனாதிபதி என்ற ரீதியில் இந்த சம்பவம் குறித்து மிகவும் மனம் வருந்துகின்றேன். அதேபோன்று அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கின்றேன். நான் உட்பட அனைவரும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ள 4 இலட்சத்து 22 ஆயிரம் மக்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கு மாத்திரம் 9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிவாரண நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்