மாலத்தீவு அதிபர் தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தல் குறித்த செய்திகளை சேகரிக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் சமயத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு விசா வழங்கப்படாத நிலை உள்ளது. முன்னதாக தேர்தல் செய்திகளை சேகரிக்க வரும் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் பெயர், விபரங்கள் பட்டியலை நேற்று (21ம் தேதி) தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச பத்திரிக்கையாளர்கள் தேர்தல் செய்தி சேகரிப்பதற்காக மாலத்தீவு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவுக்கு இந்தியர்கள் செல்ல பயணத்தின் போதே விசா பெறும் நடைமுறை உள்ளது. அதனால் இந்திய பத்திரிக்கையாளர்கள் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டு தேர்தல் செய்திகளை சேகரிக்க வாய்ப்பு இருந்தது.
ஆனால், மாலத்தீவு தேர்தல் ஆணையம் தேர்தல் செய்திகளை சேகரிக்க தடை விதிக்கப்பட்ட சர்வதேச பத்திரிக்கையாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்திய அரசு செய்தி நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின், இத்தேர்தலில் 2வது முறையாக போட்டியிடுகிறார். இவர் மீது எதிர்கட்சிகள் அதிகளவில் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள நிலையில் தேர்தல் நடைபெறுகிறது.
இது போன்று தேர்தலின் போது செய்தி சேகரிக்க தடை விதிக்கும் நடைமுறை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமல்படுத்துவது புதிய ஃபேஷனாக உள்ளது. நேபாள், பூட்டான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் பத்திரிக்கைகளுக்கு தடை விதித்தது கிடையாது.
ஆனால், சமீபத்தில் பாகிஸ்தானில் பிரதமரக இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் இந்திய பத்திரிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.