சீனா உடனான வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவின் சைக்கிள் தொழிற்சாலைகள் பாதிப்படைய தொடங்கியுள்ளன. தமது அறிவுசார்ந்த தொழில்நுட்பங்களை திருடி வருவதாக சீனா மீது குற்றம் சாட்டிய அமெரிக்கா, சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரிவிதித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டால், மேலும் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், இந்த வரிவிதிப்பு வரும் 24-ம் தேதி அமலுக்கு வரும் என்றும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவை பழிவாங்கும் வகையில் அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு சீனா கூடுதல் வரிவிதித்தது. இதன்காரணமாக அமெரிக்கா, மற்றும் சீனாவில் பரஸ்பர வர்த்தகம் செய்துவரும் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அமெரிக்காவில் இயங்கிவரும் சைக்கிள் தொழிற்சாலைகளுக்கு மிகுந்த இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தெற்கு கரோலினாவில் உள்ள அமெரிக்க சைக்கிள் நிறுவனம் ஆண்டுக்கு 4 லட்சம் சைக்கிள்களை உற்பத்தி செய்து வருகிறது.
சைக்கிளுக்கு தேவையான பெரும்பாலான உதிரிபாகங்களை சீனாவிடமிருந்தே இந்நிறுவனம் வாங்கி வருகிறது. இந்த சூழலில் கூடுதல் வரிவிதிப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்படுவதோடு உதிரி பாகங்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதால் சந்தையில் விற்பனை மோசமாகும் என அந்த சைக்கிள் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
சைக்கிளுக்கு தேவையான சீனாவின் உதிரிபாகங்கள் வேறு எந்த நாடுகளாலும் தர முடியாது என்றும், அந்த அளவுக்கு அதன் தரம் நன்றாக இருந்ததாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தை போல சீன நிறுவனத்துடன் வர்த்தகம் செய்து வரும் சூழலில் தற்போது அதற்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவது போல கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதல் வரிவிதிப்பு காரணமாக சைக்கிள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் தொழிற்சாலையின் நிலைமை படுமோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.