உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து உலகம் முழுவதும் ஆய்வு செய்து வந்த ஐ.நா சபையில் சுகாதார அமைப்பு, இந்த ஆண்டு 1 கோடியே 81 லட்சம் பேருக்கு புதிதாக புற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், சுமார் 96 லட்சம் பேர் உயிர் இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
பல ஆண்டுகளாக மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயை (Cancer) குணப்படுத்த இதுவரை சரியான மருந்துகள் இல்லை என்பதே உண்மை.புற்றுநோய் தொற்றுநோய் கிடையாது என்றாலும், இந்த நோயின் தாக்கல் பெரும்பாலோருக்கு ஆரம்ப காலங்களிலேயே தெரிவதில்லை. நோய் முற்றிய நிலையில், கண்டுபிடிக்கப்படும் இந்த நோய்க்கும் கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள் மிகவும் கொடூரமானது.
கொடூரமான இந்த நோய் தாக்கப்பட்டவர்கள், அதிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம். ஆனால், சரியான மருத்துவ பரிசோதனைகளும், மருத்துவமும் தொடர்ந்து எடுத்து வந்தால், நோயின் கோரப்பிடியில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
மாறி வரும் உணவுக்கலாச்சாரம், ரசாயண ஆலைகளின் கழிவுகள் வெளியேற்றம், அணு உலைகளின் தாக்கம், மக்கள் தொகை வளர்ச்சி,சுகாதாரமற்ற வாழ்க்கை போன்றவற்றால் உலகம் முழுவதும் புற்று நோய் பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. இது சம்பந்தமாக ஆய்வு செய்த ஐ.நா. அமைப்பின் சர்வதேச புற்று நோய் ஆய்வு மையம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, தற்போதைய 2018-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 1 கோடியே 81 லட்சம் பேருக்கு புதிதாக புற்று நோய் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறது. அதுபோல, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில், சுமார் 96 லட்சம் பேர் இந்த ஆண்டு உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்று கூறி உள்ளது.
மேலும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்டுக்கு 1 கோடியே 41 லட்சம் பேர் புதிதாக புற்று நோயின் பாதிப்புக்கு ஆளானதாகவும், இந்த கொடிய நோய் காரணமாக ஆண்டுக்கு 82 லட்சம் பேர் உயிர் இழந்து வந்தனர்.
ஆனால், தற்போது உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக தெரிவித்து உள்ளது.
ஆண்களில் 5-ல் ஒருவருக்கும், பெண்களில் 6-ல் ஒருவருக்கும் வாழ்நாளில் எந்த நேரத்திலும் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாகவும், 21-ம் நூற்றாண்டில் புற்று நோய் காரணமாகத்தான் உலகத்தில் அதிக உயிர் இழப்புகள் ஏற்படும் என்று கணித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.புற்று நோய்களில் 12-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அதில் ஒவ்வொரு நாட்டில் நிலவும் சமூக சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஒரு குறிப்பிட்ட வகை புற்று நோய்கள் அந்த நாட்டு மக்களை தாக்குகின்றன.
உலகில் நுரையீரல் புற்று நோயால் அதிக உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. மொத்த புற்று நோய் உயிர் இழப்பில் கால் சதவீதம் பேர் நுரையீரல் புற்று நோயால் உயிர் இழக்கின்றனர்.
பெண்களை பொறுத்த வரை 15 சதவீதம் பேர் மார்பக புற்று நோயாலும், 13.8 சதவீதம் பேர் நுரையீரல் புற்று நோயாலும், 9.5 சதவீதம் பேர் பெருங்குடல் புற்று நோயாலும் பாதிக்கப்படு கிறார்கள்.
டென்மார்க், நெதர்லாந்து, சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட 28 நாடுகளில் புற்று நோய்க்கு பெண்கள் உயிர் இழப்பது அதிகமாக உள்ளது.
ஆசிய நாடுகளில் தான் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு புற்று நோய் பாதிப்புக்கு ஆளாகுகிறவர்களும், உயிர் இழப்பவர்களும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சுகாதார அமைப்பின் புற்றுநோய் பிரிவு இயக்குனர் கிறிஸ்டோபர் வில்டு கூறியபோது, புற்றுநோய் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது என்றும், இதை தடுப்பது பெரும் சவாலாக உள்ளது என்று கூறினார்.
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் முறையான தடுப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுப்பதாலும், நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவதாலும் உயிர் இழப்புகளை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.