தமிழர் தேசத்தின் அபிவிருத்தியை இலங்கை இராணுவத்தினர் தீர்மானிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பூநகரியின் நெற்பிலவுப்பகுதியின் நாரந்தாழ்வு வீதியின் புனரமைப்பில் இராணுவத்தலையீடு இருப்பது குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து அந்த வீதி மக்களுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தமிழர்கள் இந்த மண்ணிலே தங்ககளைத்தாங்களே ஆள விரும்புகிறார்கள் அதற்காகத்தான் நாம் 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றோம் என்றும் கூறியுள்ளார்.
எங்களுடைய தேசம் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்பதை எமது மக்களும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுமே தீர்மானிக்க வேண்டும் இராணுவத்தினர் அல்ல.
எமது மண்ணிலே எமது மக்களின் சனத்தொகைக்கு நிகராக இராணுவம் நிலை கொண்டிருக்கிறது.
எமது மக்களுக்கு சொந்தமான பல காணிகளை பலவந்தமாக கைப்பற்றி வைத்திருக்கிற இராணுவம் எமது மக்களிற்கு வருமானம் ஈட்டித்தரக்கூடியபல காணிகளை அடாத்தாக கைப்பற்றி அதனுடைய வளங்களை தாம் சுரண்டி அதன் வருமானத்தை அனுபவித்து வருகின்றனர் இராணுவத்தினர்.
உண்மையாக இந்த மண்ணிலே நல்லிணக்கம் மலரவேண்டுமாக இருந்தால் எமது மக்களுக்கு சொந்தமான காணிகளை அவர்களிடமே மீளக்கையளித்து எமது மக்களின் வளங்களின் வருமானத்தை எமது மக்களே அனுபவிக்க வைப்பதனூடாகவே முடியும் அதை விடுத்து எமது கிராமங்களில் தேர் இழுப்பதனூடாகவோ வீதிகளை போடுவதனூடாகவோ இராணுவத்தினரால் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது.
எமது மண்ணினுடைய அபவிருத்திகளை மேற்கொள்வதற்கு எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை பிரதேசசபைகள் போன்றவற்றினூடாக நாம் எமது தேசத்தின் அபிவிருத்தியை நாம் முன்னெடுப்போம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.