ஒரே இடத்தில் 80 நபர்களை தாக்கிய மின்னல்: அவசரமாக ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி
ஜேர்மனியில் நிலவி வரும் மோசமான காலநிலையின் காரணமாக ஒரே நேரத்தில் 80 நபர்கள் மீது மின்னல் தாக்கியதால் முக்கியமான இசை நிகழ்ச்சி ஒன்று அவசரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கடந்த சில நாட்களாக மோசமான காலநிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஜேர்மனியில் மட்டும் இந்த பெருமழைக்கு இதுவரை 11 பேர் வரை பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், ஜேர்மனியில் புகழ்பெற்ற Rock am Ring என்ற இசை நிகழ்ச்சி பிராங்க்பர்ட் நகருக்கு அருகே உள்ள Mendig என்ற விமான நிலையத்தில் நடைபெற்று வந்துள்ளது.
நேற்று இசை நிகழ்ச்சியின் நிறைவு நாள் என்பதால், சுமார் 92,000 ரசிகர்கள் நிகழ்ச்சியை கண்டுகளிக்க திரண்டுள்ளனர்.
இச்சூழலில் இடி, மின்னலுடன் மழை தொடர அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் தங்குவதற்கு இடம் இன்றி தவித்துள்ளனர். ஒரு சிலர் நிறுத்தப்பட்ட வாகனங்களில் கீழ் தஞ்சம் அடைந்தனர்.
காலநிலை மோசமானதை தொடர்ந்து, திரண்டிருந்த கூட்டத்தின் மத்தியில் மின்னல் தாக்கியுள்ளது.
இதில், 80 ரசிகர்கள் பாதிக்கப்பட்டதுடன், 11 பேர் அவரசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இக்கட்டான நிலையை உணர்ந்த நகராட்சி அதிகாரிகள் இசை நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்து, ரசிகர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இறுதி நாளான நேற்று இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து அவர்கள் பேசியபோது, ‘இறுதி நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. எனினும், அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறோம்.
ஏனெனில், நிகழ்ச்சியை விட ரசிகர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.